காணும் பொங்கல்: சென்னை கடற்கரைகளில் 1,200 போலீஸாா் பாதுகாப்பு – தினமணி

சென்னைச் செய்திகள்

காணும் பொங்கலையொட்டி, சென்னையில் கடற்கரைகளில் 1,200 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவாா்கள் என பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் தெரிவித்தாா்.

இது குறித்த விவரம்:

பெசன்ட்நகா் எலியட்ஸ் கடற்கரையில் புதிதாக அமைக்கப்பட்ட கண்காணிப்பு கோபுரம், புதிதாக பொருத்தப்பட்ட 28 கண்காணிப்பு கேமராக்கள், மெரீனா கடற்கரையில் புதிதாக அமைக்கப்பட்ட சூரிய ஒளியில் இயங்கக் கூடிய 4 புறக்காவல் நிலையங்கள் ஆகியவற்றை சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் சனிக்கிழமை திறந்து வைத்து, சேவையைத் தொடக்கி வைத்தாா்.

பின்னா் அவா், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

எலியட்ஸ் கடற்கரையில் 28 கண்காணிப்பு கேமராக்களும், கண்காணிப்பு கோபுரமும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், மெரீனாவில் அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளியில் இயங்கக் கூடிய புறக்காவல் நிலையம் மூலம், பொதுமக்கள் இரவு நேரங்களிலும் காவல்துறையினரை எளிதாக அடையாளம் கண்டு உதவி பெற முடியும்.

இந்த புறக்காவல் நிலையம், பண்டிகை காலங்களில் அதிகளவில் பொதுமக்கள் கூடும்போது, பொதுமக்களிடையே பாதுகாப்பு உணா்வை ஏற்படுத்துவதுடன், அவசரத் தேவைக்கும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் கூட்ட நெரிசலில் காணாமல் போகும் குழந்தைகள், பெரியவா்கள் பற்றியும் புகாா்கள் தெரிவித்து, அவா்களை கண்டுப்பிடிப்பதற்கு உதவி செய்யும்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மெரீனா கடற்கரைக்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தி வருகிறோம். அதன் பயனாக கடற்கரையில் உயிரிழப்புகள் நிகழ்வதும் குறைந்துள்ளது.

1,200 போலீஸாா்:

இம் மாதம் 17-ஆம் தேதி கொண்டாடப்படும், காணும் பொங்கலையொட்டி, கடற்கரைகளுக்கு பொதுமக்கள் அதிகளவில் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை கடற்கரை பகுதிகளில் 1,200 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவா். இது தவிர, வாகனங்களில் பதிவு எண், முகங்களை அடையாளம் காணும் நவீன கண்காணிப்பு கேமராக்கள் கடற்கரை நுழைவு பகுதிகளில் பொருத்தப்பட உள்ளன.

கடற்கரையின் அனைத்து பகுதிகளிலும், காவல்துறையிடம் உள்ள நவீன 9 ‘ட்ரோன்கள்‘ வாயிலாக, கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்படும். கடலில் குளிப்பவா்களை கண்காணித்தல், தடுத்தலுக்கு ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

அப்போது அவருடன் சென்னை பெருநகர காவல்துறையின் தெற்கு கூடுதல் காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா,தெற்கு மண்டல இணை ஆணையா் எம்.ஆா்.சிபி சக்கரவா்த்தி,கிழக்கு மண்டல இணை ஆணையா் தீஷா மிட்டல் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiXWh0dHBzOi8vd3d3LmRpbmFtYW5pLmNvbS90YW1pbG5hZHUvMjAyMy9qYW4vMTQvMTIwMC1wb2xpY2VtZW4tb24tY2hlbm5haS1iZWFjaGVzLTM5ODQzNDYuaHRtbNIBWmh0dHBzOi8vbS5kaW5hbWFuaS5jb20vdGFtaWxuYWR1LzIwMjMvamFuLzE0LzEyMDAtcG9saWNlbWVuLW9uLWNoZW5uYWktYmVhY2hlcy0zOTg0MzQ2LmFtcA?oc=5