நாட்டுப்புறக் கலைகளை வளர்க்கும் நோக்கிலும், நமது பாரம்பரியத்தை உலக மக்களுக்கு கொண்டு செல்லவும், கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் “சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா” நடைபெறுகிறது. பொங்கல் பண்டிகையொட்டி இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
கடந்த 13-ம் தேதி சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னையில் 18 இடங்களில் நடைபெறுகிறது. 600க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களது கலைகளை அரங்கேற்றி வருகின்றனர்.
கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், தெருக்கூத்து எனப் பல்வேறு பாரம்பரிய நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
5 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சி நாளை (செவ்வாய்க்கிழமை) உடன் முடிவடைகிறது. பொங்கல் பண்டிகை நாளான நேற்று 3-வது நாள் நிகழ்ச்சி பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதியில் உற்சாகமாக நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை கண்டு களித்தார். அவருடன் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரும், எம்.பியுமான கனிமொழி, அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நீலகிரி உதயகுமார் குழுவின் கோத்தர் நடனம், கவின் கலை பல்கலைகழக மாணவர்களின் இசை நிகழ்ச்சி, சென்னை சங்கமம் நிகழ்ச்சி மூலமாக பிரபலமடைந்த ஆந்தை குழி இளையராஜா, கிடாக்குழி மாரியம்மா உள்ளிட்டோரின் நிகழ்ச்சிகள் களைகட்டின. அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது. முதல்வரும் கலைஞர்களை உற்சாகப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகளை கண்டு ரசித்து கைத்தட்டி பாராட்டினார். சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சி மிகுந்த மகிழ்ச்சி தருவதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiYmh0dHBzOi8vdGFtaWwuaW5kaWFuZXhwcmVzcy5jb20vdGFtaWxuYWR1L2NtLXN0YWxpbi1hdHRlbmRzLWNoZW5uYWktc2FuZ2FtYW0tY3VsdHVyYWwtZmVzdC01NzcxOTIv0gFnaHR0cHM6Ly90YW1pbC5pbmRpYW5leHByZXNzLmNvbS90YW1pbG5hZHUvY20tc3RhbGluLWF0dGVuZHMtY2hlbm5haS1zYW5nYW1hbS1jdWx0dXJhbC1mZXN0LTU3NzE5Mi9saXRlLw?oc=5