வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை–பள்ளிக் கல்வி துறை சார்பாக, சென்னையில் நேற்று, சர்வதேச புத்தக கண்காட்சி துவங்கியது. மூன்று நாட்கள் நடக்க உள்ள கண்காட்சியில், 30 நாடுகளின் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.
![]() |
சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், சென்னை புத்தக கண்காட்சி நடந்து வருகிறது. இந்த வளாகத்தில், பள்ளிக் கல்வி துறை சார்பில், சர்வதேச புத்தக கண்காட்சியை, பள்ளிக் கல்வி அமைச்சர் மகேஷ் நேற்று துவக்கி வைத்தார். இதில், 30 நாடுகளை சேர்ந்த புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
![]() |
அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி:
சர்வதேச மொழியில் வெளியாகியுள்ள இலக்கியங்களை, தமிழிலும்; தமிழ் புத்தகங்களை, வெளிநாட்டு மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிட, இந்த சர்வதேச புத்தக கண்காட்சி துவக்கப்பட்டுள்ளது. 30 நாடுகளை சேர்ந்த புத்தக எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஒவ்வொரு நாட்டை சேர்ந்த புத்தகங்களும், தனித்தனி அரங்குகளில் இடம் பெற்றுள்ளன.
தமிழ் மொழியில் வெளியாகியுள்ள இலக்கிய புத்தகங்களுக்கு தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு வந்துள்ள வெளிநாட்டு எழுத்தாளர்கள் மற்றும் புத்தக வெளியீட்டாளர்கள், தமிழ் புத்தகங்களை பார்த்து, அவற்றை தங்கள் மொழியில் மாற்றம் செய்வதற்கு, உரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு எழுத்தாளர்கள், வாசகர்களை சந்தித்து பேசுவர். இந்த கண்காட்சியில், புத்தக விற்பனை நடக்காது.
இங்குள்ள கருத்தரங்கில், எழுத்தாளர்கள் உரையாற்ற உள்ளனர். பார்வையாளர்களுக்கு மாலை 4:00 மணிக்கு அனுமதி அளிக்கப்படும். அரங்கை சுற்றிப் பார்க்க கட்டணம் கிடையாது.
தமிழக அரசின் சார்பில், 6 கோடி ரூபாய் செலவில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.


திருமண பலாத்காரம் குற்றமா? மத்திய அரசுக்கு ‘நோட்டீஸ்!’(2)

எம்.ஜி.ஆர்., பிறந்த நாள்: மனிதநேயம் மலர்ந்த நாள்…!
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFtYWxhci5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP2lkPTMyMTk0MzjSAQA?oc=5