சென்னை: மனைவி கிண்டல்; கணவருக்கு கொலை மிரட்டல் – கூட்டாளியுடன் ரௌடி கைது – Vikatan

சென்னைச் செய்திகள்

சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் சுந்தரி (26) (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர் கடந்த 15-ம் தேதி வீட்டின் வெளியில் நின்றுக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற இரண்டு இளைஞர்கள் சுந்தரியை கிண்டல் செய்திருக்கிறார்கள். அதை சுந்தரி, தட்டிக் கேட்டிருக்கிறார். அதனால் இளைஞர்கள் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியிருக்கிறார்கள். சத்தம் கேட்டு வெளியில் வந்த சுந்தரியின் கணவர் இளைஞர்களிடம் ஏன் என் மனைவியை கிண்டல் செய்கிறீர்கள் என தட்டிக் கேட்டிருக்கிறார்.

டில்லிபாபு

உடனே அருகிலிருந்த டியூப் லைட்டை எடுத்த இளைஞர்களில் ஒருவன், சுந்தரியின் கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். பின்னர் இருவரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டனர். இந்தச் சம்பவம் குறித்து சுந்தரி, கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் சுந்தரியிடம் தகராறில் ஈடுபட்டது பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஏழுமலை (20), டில்லிபாபு (24) எனத் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்து விசாரித்தனர். இதில் ஏழுமலை மீது ஒரு வழிப்பறி வழக்கு உள்ளது. மேலும் டில்லிப்பாபு, கொருக்குப்பேட்டை சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது தெரியவந்தது. இவர் மீது ஒரு கொலை முயற்சி உள்பட 8 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. விசாரணைக்குப்பிறகு இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiS2h0dHBzOi8vd3d3LnZpa2F0YW4uY29tL25ld3MvY3JpbWUveW91dGhzLWFycmVzdGVkLWluLXdvbWFuLWhhcmFzc21lbnQtY2FzZdIBVWh0dHBzOi8vd3d3LnZpa2F0YW4uY29tL2FtcC9zdG9yeS9uZXdzL2NyaW1lL3lvdXRocy1hcnJlc3RlZC1pbi13b21hbi1oYXJhc3NtZW50LWNhc2U?oc=5