கியூபாவை முடக்க அமெரிக்காவால் முடியவில்லை: சென்னையில் சேகுவேராவின் மகள் பேச்சு – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை,

சென்னை வந்துள்ள புரட்சியாளர் சேகுவேராவின் மகள் டாக்டர் அலெய்டா குவேரா மற்றும் பேத்தி டாக்டர் எஸ்டானிபா குவேரா ஆகியோர் நேற்று மாலை தியாகராயநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அலுவலகத்துக்கு வந்தனர்.

அவர்களை, மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர், அங்கு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அலெய்டா குவேரா பேசியதாவது:-

அமெரிக்கா தடை விதிப்பு

கியூபா ஒரு சிறிய நாடுதான். கேரள மாநிலத்தின் அளவில் மூன்றில் ஒரு பகுதிதான் எங்கள் நாட்டின் அளவு. ஏகாதிபத்திய அமெரிக்காவிடம் இருந்து வெறும் தொண்ணூறு மைல் தெலைவில்தான் கியூபா உள்ளது. கியூபா மீதான ஏகாதிபத்தியத்தின் தடைகள் பல நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு டாக்டர் என்கிற வகையில் அமெரிக்காவின் தடைகளால் ஏற்படும் கடும் விளைவுகளை நேரடியாகவே அறிவேன்.

மருத்துவ தேவைகளுக்காக நாங்கள் இறக்குமதி செய்ய வேண்டிய மருந்துகள் பலவற்றுக்கும் அமெரிக்கா தடை விதித்துள்ளது. நாங்கள் இறக்குமதி செய்யும் மருந்துகளில் 80 சதவீத மருந்துகளை நேரடியாக இறக்குமதி செய்ய முடியாமல் உள்ளது. இதன் விளைவாக கூடுதல் விலை கொடுத்தே மருந்துகளை வாங்குகிறோம்.

5 தடுப்பூசிகள் கண்டுபிடிப்பு

பல இடர்பாடுகள் உருவாக்கி கியூபாவை முடக்க அமெரிக்க ஏகாதிபத்தியம் முயன்றாலும் அதனால் எங்களின் மகிழ்ச்சியையும், மனிதம் நிறைந்த பங்களிப்பையும் குலைக்க முடியவில்லை. நான் என்கிற தனித்த சிந்தனைகளை கடந்து நாம் என்கிற சிந்தனையே அதை சாத்தியப்படுத்தியுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் அதை எதிர்கொள்ள உலக சுகாதார நிறுவனம் அமெரிக்காவுக்கோ, பிரிட்டனுக்கோ, சுவிட்சர்லாந்துக்கோ செல்லவில்லை. மாறாக கியூபாவிடம்தான் வந்தது. இவ்வளவு நெருக்கடிக்கு இடையிலும் கொரோனாவை தடுக்கும் 5 தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளோம். அதற்கு காரணம், பலரின் உயிர் தியாகத்துடன், சோசலிசத்தின் மீதான பற்றுறுதியுடன் கியூபா செயலாற்றுவதுதான்.

இன்றைய புதிய சூழலில் சவால்கள் அதிகரித்துள்ளது. ”வெற்றி பெறும் வரை போராடுவோம்” எனும் சேகுவேராவின் வரியே இந்த புதிய சூழலை எதிர்கொண்டு வெல்லவும் நமக்கு பலம் தருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

விமான நிலையத்தில்…

முன்னதாக திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா மற்றும் பேத்தி எஸ்டானிபா ஆகியோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

வரவேற்பு நிகழ்ச்சிகள்

இந்த நிலையில், சென்னை தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில தலைமையகமான பாலன் இல்லத்தில் இன்று (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு இவர்கள் இருவருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட இருக்கிறது.

இதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று மாலை 4.30 மணிக்கு சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiaWh0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vTmV3cy9TdGF0ZS91cy1jb3VsZG50LWZyZWV6ZS1jdWJhLXNlZ3VlcmFzLWRhdWdodGVyLXNwZWFrcy1pbi1jaGVubmFpLTg4MDcyNNIBbWh0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vYW1wL05ld3MvU3RhdGUvdXMtY291bGRudC1mcmVlemUtY3ViYS1zZWd1ZXJhcy1kYXVnaHRlci1zcGVha3MtaW4tY2hlbm5haS04ODA3MjQ?oc=5