போடி-மதுரை பாதையில் நாளை முதல் சென்னைக்கு தூரந்தோ ரெயில்- பயணிகளிடம் வரவேற்பு பெறுமா? – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

தென்னக ரெயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு கோட்டங்கள் உள்ளன. இதில் மதுரை கோட்டத்தில் சுமார் 14 மாவட்டங்கள் உள்ளன. ஆனால், மதுரை-போடி இடையேயான மீட்டர் கேஜ் பாதைகள் தற்போது வரை அகலப்பாதையாக மாற்றப்படவில்லை.

அதாவது, மதுரை-போடி இடையேயான 90 கி.மீ. மீட்டர் கேஜ் பாதையை அகலப்பாதையாக மாற்ற கடந்த 2011-ம் ஆண்டு முதல் அந்த பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 2012-ம் ஆண்டில் ரூ.180 கோடிக்கு அகலப்பாதை திட்டம் தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

ஆனால், ஒவ்வொரு நிதியாண்டிலும் பட்ஜெட்டில் சொற்பமான தொகை ஒதுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கட்டுமான பொருள்கள் விலை உயர்வு காரணமாக திட்ட மதிப்பீடு ரூ.450 கோடியாக உயர்த்தப்பட்டது.

எதிர்பார்ப்பு

அதனை தொடர்ந்து, தென்னக ரெயில்வே மற்றும் தென்மாவட்ட எம்.பி.க்களின் முயற்சியால் நிதி ஒதுக்கப்பட்டு தற்போது மதுரை-தேனி இடையே 75 கி.மீ. தூர அகலப்பாதையில் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. தேனி-போடி இடையேயான 15 கி.மீ. பணிகள் முடிந்து ரெயில்கள் இயக்க, ரெயில்வே பாதுகாப்பு கமிஷனரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்த வழித்தடத்தில் மீட்டர்கேஜ் பாதையில் 2 பாசஞ்சர் ரெயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன. இந்த ரெயில்கள் மதுரை-சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு இணைப்பு ரெயிலாக இயக்கப்பட்டன. மதுரை-போடி இடையே யூனிகேஜ் திட்டத்தின் கீழ் சென்னைக்கு ரெயில்சேவை தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் தேனி மாவட்ட பயணிகளும், மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட பயணிகளும் எதிர்பார்த்திருந்தனர்.

இதற்காக மதுரை-சென்னை சென்டிரல் தூரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில் போடி வரை நீட்டிப்பு செய்யப்பட இருப்பதாக கடந்த மே மாதம் தகவல் வெளியானது. இது குறித்து தினத்தந்தியிலும் செய்தி வெளியிடப்பட்டது.

போடியில் இருந்து சென்னைக்கு தினசரி ரெயில்சேவை என்பது தேனி மாவட்ட மக்களின் பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால், வாரம் 3 நாட்கள் இயக்கப்படும் தூரந்தோ எக்ஸ்பிரசை போடி வரை நீட்டிப்பதால் எந்த பலனும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே, தென்மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக சென்னை செல்லும் ரெயில்களில் மதுரை, தேனி மாவட்ட பயணிகளுக்கு இருக்கை கிடைப்பதில்லை. தினமும் காத்திருப்போர் பட்டியலில் மட்டுமே பயணிகள் இடம்பெற வேண்டியுள்ளது. மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் மட்டும் தான் உள்ளது. அந்த ரெயிலை தொடர்ந்து மற்றொரு ஷேடோ (நிழல்) ரெயில் போடியில் இருந்து இயக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம், தென்மாவட்ட ரெயில் பயணிகள் சங்கம் ஆகியன தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

பயண தூரம்

மதுரையில் இருந்து திருச்சி, விழுப்புரம் வழியாக சென்னை செல்ல 493 கி.மீ. தூரத்துக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் 7 மணி நேரம் 45 நிமிடங்களை எடுக்கிறது. தூரந்தோ எக்ஸ்பிரஸ் மதுரையில் இருந்து கரூர், சேலம், காட்பாடி வழியாக சென்னை சென்டிரலுக்கு 556 கி.மீ. தூரத்தை கடக்க 9 மணி நேரம் எடுக்கிறது. மதுரை-போடி 90 கி.மீ. தூரத்தை கணக்கிட்டால் பயண நேரம் மேலும் அதிகரிக்கும். இதனால், பயண நேரம் மட்டுமின்றி, பயண தூரமும் அதிகரித்து பயணிகளுக்கான டிக்கெட் கட்டணமும் அதிகமாக இருக்கும். இந்த ரெயிலில் 4 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் உள்ளன. பிற பெட்டிகள் அனைத்தும் குளிரூட்டப்பட்டவை.

இந்த ரெயிலை கூடுதல் ரெயிலாக போடியில் இருந்து மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக அல்லது திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம் வழியாக சென்னைக்கு இயக்கினால் பயணிகளின் பயன்பாட்டுக்கு வசதியாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாண்டியன் எக்ஸ்பிரசில் இடம் கிடைக்காமல் இருக்கும் மதுரை பயணிகளும் அதிகம் பயன்பெற வாய்ப்புள்ளது.

நீட்டிப்பு

மதுரை-போடி அகலப்பாதையில் போடியில் இருந்து மதுரை, திண்டுக்கல், நாமக்கல், சேலம், ஓசூர் வழியாக பெங்களூருவுக்கு ஒரு ரெயிலும், மதுரை, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி வழியாக கோவைக்கு ஒரு பகல்நேர இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலும் இயக்க வேண்டும் என்றும் பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. போடி-கோவை இன்டர்சிட்டி ரெயிலை பொறுத்தமட்டில், போடியிலிருந்து அதிகாலை புறப்பட்டு கோவைக்கு காலை 10 மணிக்கு செல்லும் வகையிலும் மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்குள் போடி ரெயில் நிலையம் சென்றடையுமாறும் நேர அட்டவணை தயாரித்து ரெயில் இயக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தென்னக ரெயில்வே பொது மேலாளர் அலுவலக டுவிட்டர் பக்கத்தில் மதுரை-சென்னை தூரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை (வியாழக்கிழமை) முதல் போடி வரை நீட்டிப்பு செய்யப்படும் என நேற்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவும், எதிர்ப்பும் கலந்த பதிவுகள் டுவிட்டரில் பதிவிடப்படுகின்றன. போடியில் இருந்து மதுரை வழியாக சென்னைக்கு இயக்கப்படும் தூரந்தோ ரெயிலில் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டியில் ரூ.440, 3 அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டியில் ரூ.990, 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டியில் ரூ.1,410 கட்டணமாக வசூலிக்கப்படலாம் என தெரிகிறது.

மதுரை-சென்னை தூரந்தோ எக்ஸ்பிரஸ்

மதுரை-சென்னை தூரந்தோ எக்ஸ்பிரஸ் (வ.எண்.20602) செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 10.50 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.55 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் சென்னை சென்டிரல்-மதுரை தூரந்தோ எக்ஸ்பிரஸ் (வ.எண்.20601) திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது.

மதுரை-தேனி எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில் (வ.எண்.06701) தினமும் மதுரையில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்பட்டு காலை 9.35 மணிக்கு போடி ரெயில் நிலையம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் தேனி-மதுரை ரெயில் (வ.எண்.06702) தேனியில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு மதுரை வந்தடைகிறது.

தற்போது இந்த ரெயில் நாளை முதல் இருந்த போடி வரை நீட்டிக்கப்பட்டால் அதற்கேற்ப நேர மாற்றம் செய்யப்படும். அவ்வாறு செய்யும் போது, போடி-மதுரை எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயிலை நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா ரெயிலுக்கு இணைப்பு ரெயிலாக இயக்க வேண்டும். ஏனெனில், முன்பதிவில்லாத அந்தியோதயா ரெயிலில் தேனி மாவட்ட பயணிகள் குறைந்த கட்டணத்தில் சென்னை செல்ல வசதியாக இருக்கும். அதேபோல, போடியில் இருந்து தினமும் காலை ஒரு ரெயில் மதுரைக்கு புறப்பட்டு வருவதற்கான ஏற்பாடுகளையும் மதுரை கோட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.

மதுரை-போடி-சென்னை சென்டிரல் ரெயில் நேரம்

மதுரை-போடி இடையே அகலப்பாதையில் சுமார் 12 வருடங்களுக்கு பிறகு, வருகிற 19-ந் தேதி முதல் ரெயில் இயக்கப்பட உள்ளது. இதற்காக தற்போது மதுரை-தேனி இடையே இயக்கப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் கட்டண பாசஞ்சர் ரெயில், நேரம் மாற்றப்பட்டு பாசஞ்சர் ரெயிலாக இயக்கப்பட உள்ளது. அதன்படி மதுரை-போடி பாசஞ்சர் ரெயில் (வ.எண்.56701) மதுரையில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்படும். காலை 8.35 மணிக்கு வடபழஞ்சியில் இருந்து புறப்படும். 9.05 மணிக்கு உசிலம்பட்டியில் இருந்தும், 9.25 மணிக்கு ஆண்டிப்பட்டியில் இருந்தும், 9.44 மணிக்கு தேனியில் இருந்தும் புறப்பட்டு காலை 10.30 மணிக்கு போடி ரெயில் நிலையம் சென்றடையும். மறுமார்க்கத்தில் போடி-மதுரை பாசஞ்சர் ரெயில் (வ.எண்.56702) போடியில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்படும். தேனியில் இருந்து 6.15 மணிக்கும், ஆண்டிப்பட்டியில் இருந்து 6.34 மணிக்கும், உசிலம்பட்டியில் இருந்து 6.54 மணிக்கும், வடபழஞ்சியில் இருந்து இரவு 7.25 மணிக்கும் புறப்பட்டு 7.50 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடையும்.

சென்னை சென்டிரல்-மதுரை தூரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.20601) சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.10 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வரும்.. அங்கிருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு போடி செல்கிறது. இந்த ரெயில் உசிலம்பட்டியில் இருந்து காலை 8.01 மணிக்கும், ஆண்டிப்பட்டியில் இருந்து 8.21 மணிக்கும், தேனியில் இருந்து 8.40 மணிக்கும் புறப்பட்டு காலை 9.35 மணிக்கு போடி ரெயில் நிலையம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், போடி-சென்னை சென்டிரல் தூரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.20602) போடியில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்படுகிறது. தேனியில் இருந்து இரவு 8.52 மணிக்கும், ஆண்டிப்பட்டியில் இருந்து 9.10 மணிக்கும், உசிலம்பட்டியில் இருந்து 9.30 மணிக்கும் புறப்பட்டு 10.45 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மதுரையில் இருந்து வழக்கமான நேரத்தில் இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.55 மணிக்கு சென்னை சென்டிரல் சென்றடைகிறது. ரெயில் இயக்கத்துக்கான உத்தரவை ரெயில்வே வாரியத்தின் துணை இயக்குனர்(ரெயில் பெட்டிகள் பிரிவு) அலுவலகம் வழங்கியுள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMif2h0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vTmV3cy9TdGF0ZS9ib2RpLW1hZHVyYWktcm91dGUtZnJvbS10b21vcnJvdy10by1jaGVubmFpLXRyYWluLXdpbGwtYmUtd2VsY29tZWQtYnktcGFzc2VuZ2Vycy04ODA3MTnSAYMBaHR0cHM6Ly93d3cuZGFpbHl0aGFudGhpLmNvbS9hbXAvTmV3cy9TdGF0ZS9ib2RpLW1hZHVyYWktcm91dGUtZnJvbS10b21vcnJvdy10by1jaGVubmFpLXRyYWluLXdpbGwtYmUtd2VsY29tZWQtYnktcGFzc2VuZ2Vycy04ODA3MTk?oc=5