சென்னை கொத்தவால்சாவடியில் முதியவரை எட்டி உதைத்த விவகாரம்: காவல் உதவி ஆய்வாளர் … – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: முதியவரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த விவகாரத்தில் கொத்தவால்சாவடி காவல் உதவி ஆய்வாளர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106-வது பிறந்தநாள் விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட கொத்தவால்சாவடி ஆதியப்பன் தெருவில் அதிமுக சார்பில் ஏழை பெண்களுக்கு சேலையும், 5 ஆயிரம் பேருக்கு அன்னதானமும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து, அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். குறைந்த அளவு போலீஸாரே இருந்ததால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அப்போது, கொத்தவால்சாவடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், உணவு வாங்க வந்த முதியவர்கள் சிலரை தரதரவென இழுத்து தள்ளினார்.

ஒரு முதியவரை கீழே தள்ளி தனது பூட்ஸ் காலால் எட்டி உதைத்தார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. காவல் உதவி ஆய்வாளரின் செயலை பலரும் கண்டித்தனர். இந்நிலையில், முதியவரை எட்டி உதைத்த காவல் உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiVWh0dHBzOi8vd3d3LmhpbmR1dGFtaWwuaW4vbmV3cy90YW1pbG5hZHUvOTMwODYzLXRoZS1tYXR0ZXItb2Yta2lja2luZy1hbi1vbGQtbWFuLmh0bWzSAQA?oc=5