பிப்.19 முதல் போடியில் இருந்து மதுரை, சென்னைக்கு ரயில்கள் இயக்கம்: தேனி மக்கள் மகிழ்ச்சி – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

Last Updated : 17 Jan, 2023 08:54 PM

Published : 17 Jan 2023 08:54 PM
Last Updated : 17 Jan 2023 08:54 PM

கோப்புப்படம்

போடி: போடியில் இருந்து மதுரை மற்றும் சென்னை ஆகிய ஊர்களுக்குச் செல்ல வரும் பிப்.19-ம் தேதி முதல் இரண்டு ரயில்கள் நீட்டித்து இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை – போடி இடையே 90 கிமீ தொலைவிலான அகலப் பாதையில் தற்போது தேனி வரை பணிகள் முடிவடைந்து சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேனி-போடி இடையேயான 15 கிமீ பணிகள் முடிந்து கடந்த மாதம் 29-ம் தேதி அதிவேக சோதனை ரயில் ஓட்டமும் நடைபெற்றது.

இதில் பாதுகாப்பு அம்சங்கள் திருப்திகரமாக உள்ளதாக ஆய்வுக்குழு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து இருமார்க்கமாக மதுரையில் இருந்து தேனி வரை இயங்கும் சிறப்பு ரயிலையும்(06701,06702), சென்னை சென்ட்ரலில் இருந்து மதுரை வரை இயங்கும் அதிவேக விரைவு ரயிலையும் (20601,20602) பிப்.19-ம் தேதி முதல் போடி வரை நீட்டித்து இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.

இதன்படி மதுரையில் இருந்து தேனி வரை இயக்கப்படும் சிறப்பு ரயில் மதுரையில் காலை 8.20 மணிக்கு கிளம்பி வடகவுஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி தேனி வழியே போடிக்கு 10.30-க்கு சென்றடைகிறது. மறுமார்க்கமாக மாலை 5.50 மணிக்கு போடியில் இருந்து கிளம்பி மதுரைக்கு 7.50 மணிக்கு சென்றடைகிறது.

இதே போல் சென்னையில் இருந்து மதுரைக்கு வரும் அதிவேக விரைவு ரயில் காலை 7.15 மணிக்கு கிளம்பி 9.35-க்கு போடி வந்தடைகிறது. மறுமார்க்கமாக இரவு 8.30 மணிக்கு கிளம்பி 10.45-க்கு மதுரை சென்றடைகிறது. பின்பு அங்கிருந்து இந்த ரயில் சென்னை செல்கிறது. ஏறத்தாழ 12ஆண்டுகளுக்குப்பிறகு போடிக்கு ரயில் சேவை கிடைத்துள்ளதுடன், சென்னைக்கு நேரடி ரயிலும் இயக்கப்பட உள்ளதால் தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தவறவிடாதீர்!

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiiwFodHRwczovL3d3dy5oaW5kdXRhbWlsLmluL25ld3MvdGFtaWxuYWR1LzkzMDI0Ny10cmFpbnMtcnVubmluZy1mcm9tLWJvZGktdG8tbWFkdXJhaS1jaGVubmFpLWZyb20tZmViLTE5LXBlb3BsZS1vZi10aGVuaS1kaXN0cmljdC1oYXBweS5odG1s0gEA?oc=5