மெட்ரோ இன்னிசை நிகழ்ச்சி நுழைவுச்சீட்டு கட்டணம் பயண அட்டையாக வழங்கப்படும்: சென்னை மெட்ரோ நிர்வாகம் தகவல்..! – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மார்க் மெட்ரோவுடன் இணைந்து தை திருநாளை தொடர்ந்து வருகின்ற 21.01.2023 (சனிக்கிழமை) மற்றும் 22.01.2023 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு தினங்களில் புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் ‘மெட்ரோ இன்னிசை நிகழ்ச்சி 2023’ நடைபெறவுள்ளதாகவும் அதற்கான நுழைவுச்சீட்டு கட்டணம் பயண அட்டையாக வழங்கப்படும் என்று சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:- 21.01.2023 அன்று புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் மாலை 6 மணிக்கு பிரபல பாடகர்கள் சாம் விஷால் மற்றும் ரக்ஷிதாவின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான நுழைவு கட்டணம் ரூ.550/-. அதேபோல் 22.01.2023 அன்று புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் மாலை 6 மணிக்கு தாய்க்குடம் பிரிட்ஜ் கலை குழுவின் பல்சுவை இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கான நுழைவு கட்டணம் ரூ.550/– இந்த இன்னிசை நிகழ்ச்சிக்கான நுழைவு கட்டணம் ரூ.550 (நிகழுச்சிக்கான கட்டணம் ரூ.500/- மற்றும் மெட்ரோ இரயில் பயண அட்டை ரூ.50) செலுத்தி பயண அட்டையாக நுழைவு சீட்டை பெறுபவர்கள் இந்த பயண அட்டையை மெட்ரோ இரயிலில் பயணிக்கும் போது மறுஊட்டம் (Recharge) செய்து உபயோகித்து கொள்ளலாம். இந்த பயண அட்டைகளை (Travel Card) பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20% கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

நுழைவு சீட்டு பயண அட்டையை புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ, கோயம்பேடு மெட்ரோ, திருமங்கலம் மெட்ரோ, ஆயிரம் விளக்கு மெட்ரோ, அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ மற்றும் விம்கோ நகர் மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள பயணசீட்டு விற்பனை செய்யும் கவுன்டர்களில் கிடைக்கும். நுழைவு சீட்டு பயண அட்டை ஆன்லைனில் paytm insider-லும் கிடைக்கும்.

சென்னை மாநகரில் வசிக்கும் மெட்ரோ இரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள், மெட்ரோ இரயில் நிலையங்களில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கலாம். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மார்க் மெட்ரோ செய்து வருகிறது. இவ்வாறு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiM2h0dHA6Ly93d3cuZGluYWthcmFuLmNvbS9OZXdzX0RldGFpbC5hc3A_TmlkPTgzMTcwMdIBNmh0dHBzOi8vbS5kaW5ha2FyYW4uY29tL2FydGljbGUvTmV3c19EZXRhaWwvODMxNzAxL2FtcA?oc=5