மாதவரம் பஸ் நிலையத்தில் கூடுதல் நவீன வசதிகள்- அமைச்சர் சேகர்பாபு நேரில் பார்வையிட்டு அறிவுரை – Maalaimalar தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னை:

மாதவரம் பேருந்து நிலையத்தை இந்து சமய அறநிலைத்துறை மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சி குழும அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார்.

அவருடன் சென்னைப் பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர், அன்சுல்மிஸ்ரா, முதன்மை செயல் அலுவலர், லட்சுமி மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சி குழும உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இந்த பேருந்து நிலையமானது கோயம்பேட்டில் ஏற்படும் வாகன நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையில் இருந்து வடக்கு நோக்கி ஆந்திரா, நெல்லூர், திருப்பதி மற்றும் காளஹஸ்தி செல்லும் பேருந்துகளுக்கான தனிப்பேருந்து நிலையம் ரூ.94.16 கோடி செலவில் 8 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

இப்பேருந்து நிலையத்தை முழு பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காகவும் மேலும் சிறப்பாக பராமரிப்பதற்காகவும் அமைச்சர் தலைமையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் வடக்கு நோக்கி செல்லும் பேருந்துகள் அனைத்தையும் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களுடன் கலந்தாலோசிக்க முடிவு செய்யப்பட்டது.

வடக்கு நோக்கி செல்லும் தனியார் பேருந்துகளையும் இப்பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆந்திரப்பிரதேசம் போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள தங்கும் அறை போதுமானதாக இல்லாததால் கூடுதல் இடம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆடவர் மற்றும் பெண்கள் பயணியர் தங்கும் கூடங்களை 2, 4 மற்றும் 6 பேர் தங்கும் அறைகளாக மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டது.

பயணிகளின் காத்திருக்கும் அறைகளில் இருக்கை வசதி மற்றும் தொலைக்காட்சி பெட்டி அமைக்க வேண்டும்.

மாநகர பேருந்து நிறுத்தம் இடத்தில் பயணிகளின் பயன்பாட்டிற்கு கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது

பேருந்து நிலையத்தின் முகப்பில் பயணிகளின் பயன்பாட்டிற்கு எல்.இ.டி. அறிவிப்பு பலகை அமைக்க வேண்டும்.

இந்த பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்க அமைச்சர் அறிவுறுத்தினார்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMifmh0dHBzOi8vd3d3Lm1hYWxhaW1hbGFyLmNvbS9uZXdzL3N0YXRlL21pbmlzdGVyLXNla2FyLWJhYnUtc3R1ZHktYWRkaXRpb25hbC1tb2Rlcm4tZmFjaWxpdGllcy1hdC1tYWRoYXZhcmFtLWJ1cy1zdGF0aW9uLTU2MzE1NNIBggFodHRwczovL3d3dy5tYWFsYWltYWxhci5jb20vYW1wL25ld3Mvc3RhdGUvbWluaXN0ZXItc2VrYXItYmFidS1zdHVkeS1hZGRpdGlvbmFsLW1vZGVybi1mYWNpbGl0aWVzLWF0LW1hZGhhdmFyYW0tYnVzLXN0YXRpb24tNTYzMTU0?oc=5