சென்னை: ரூ.30,000 கடன்; சிக்கன் கடைக்காரர் கொலை – நண்பனைக் கைது செய்த போலீஸ் – Vikatan

சென்னைச் செய்திகள்

சென்னை துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏஜேஸ். இவர் அந்தப்பகுதியில் சிக்கன் கடை நடத்தி வந்தார். ஏஜேஸின் நண்பர் ஸ்ரீதர். இவரிடம் கடந்த ஆண்டு 30,000 ரூபாய் கடனாக வாங்கியிருக்கிறார் ஏஜேஸ். அதன்பிறகு அவர் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. அதனால் நண்பர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்தநிலையில் கடந்த 17-ம் தேதி காணும் பொங்கல் தினத்தன்று ஏஜேஸிடம் பணத்தை ஸ்ரீதர் திரும்ப கேட்டிருக்கிறார். அப்போது நண்பர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த ஸ்ரீதர், ஏஜேஸை தள்ளிவிட்டிருக்கிறார். அதில் நிலைத்ததடுமாறிய ஏஜேஸ் சுவரில் மோதியிருக்கிறார். அதனால் அவருக்கு தலையில் உள் காயம் ஏற்பட்டிருக்கிறது. அதன்பிறகு ஸ்ரீதர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

அதன்பிறகு ஏஜேஸிக்கு தலைவலி அதிகமானதால் அவர் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஏஜேஸுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், அவரின் தலையில் ரத்தம் கட்டியிருப்பதாக தெரிவித்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி ஏஜேஸ் உயிரிழந்தார். இதுகுறித்து துரைப்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார், ஏஜேஸை கொலை செய்த குற்றத்துக்காக ஸ்ரீதரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “ஏஜேஸிடம் ஸ்ரீதரும் சிறு வயது முதல் நண்பர்களாக இருந்து வந்திருக்கின்றனர். இந்தச் சமயத்தில்தான் அவசரத் தேவைக்காக ஸ்ரீதரிடம் ஏஜேஸ் பணம் வாங்கியிருக்கிறார். அந்தப் பணத்தை திரும்ப கொடுக்காததால்தான் இருவரும் பேசாமல் இருந்து வந்திருக்கின்றனர். இந்தச் சமயத்தில்தான் ஏஜேஸ், பொங்கலையொட்டி தன்னுடைய சிக்கன் கடையில் இருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த ஸ்ரீதர், பணத்தை ஏஜேஸிடம் திரும்ப கேட்டிருக்கிறார். அப்போது இருவருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவத்தில் தலையில் காயமடைந்த ஏஜேஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏஜேஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில் அடிதடி வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தோம். இந்தச் சூழலில் ஏஜேஸ் உயிரிழந்ததால் கொலை வழக்காக மாற்றி ஸ்ரீதரைக் கைது செய்திருக்கிறோம்” என்றனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiR2h0dHBzOi8vd3d3LnZpa2F0YW4uY29tL25ld3MvY3JpbWUveW91dGgtbXVyZGVyZWQtaGlzLWZyaWVuZC1pbi1jaGVubmFp0gFRaHR0cHM6Ly93d3cudmlrYXRhbi5jb20vYW1wL3N0b3J5L25ld3MvY3JpbWUveW91dGgtbXVyZGVyZWQtaGlzLWZyaWVuZC1pbi1jaGVubmFp?oc=5