தமிழில் டப்பிங் ஆகிறது மாளிகப்புரம் – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: மலையாளத்தில் திரைக்கு வந்து வெற்றிபெற்ற ‘மாளிகப் புரம்’ படம், தமிழில் அதே பெயரில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. வரும் 26ம் தேதி திரைக்கு வரும் இந்தப் படத்தில், அய்யப்பனின் மார்கழி மாத வழிபாடு பிரதானமாக இடம்பெற்றிருக்கிறது.  ஆன்மீகமும், அறிவியலும், நம்பிக்கையும் பின்னிப் பிணைந்தது என்பதை இப்படம் சொல்கிறது. ‘மனித ரூபத்தில் கடவுள் வந்து மனிதர்களுக்கு உதவி செய்வான்’ என்பது ஆன்மீகம். ‘தகுந்த நேரத்தில் சக மனிதர்களுக்கு உதவி செய்பவன் கடவுள்’ என்று சொல்வது நம்பிக்கை. இரண்டுக்குமான இடைவெளியில் இப்படம் பயணிக்கிறது. விஷ்ணு சசி சங்கர் இயக்கியுள்ளார். இவர் சூர்யா, ஜோதிகா நடித்திருந்த ‘பேரழகன்’ படத்தின் இயக்குனர் சசி சங்கரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

‘மாளிகப்புரம்’ படத்தில் உன்னி முகுந்தன் ஹீரோவாக நடித்துள்ளார். ஏற்கனவே இவர், தனுஷுடன் ‘சீடன்’, சமந்தாவுடன் ‘யசோதா’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். மற்றும் பேபி தேவானந்தா, சம்பத் ராம், மனோஜ் கே.ஜெயன், மாஸ்டர் ஸ்ரீபத், டி.ஜி.ரவி, சைஜி குருப், அஜய் வாசுதேவ், ஸ்ரீஜித் ரவி நடித்துள்ளனர்.
காவ்யா பிலிம் கம்பெனி வழங்க, ஆன் மெகா மீடியா சார்பில் பிரியா வேணு, நீட்டா பின்டோ தயாரித்துள்ளனர். அபிலாஷ் பிள்ளையின் கதை, திரைக்கதைக்கு இயக்குனர் வி.பிரபாகர் வசனம் எழுதியுள்ளார். விஷ்ணு நாராயணன் ஒளிப்பதிவு செய்ய, ரானின் ராஜ் இசை அமைத்துள்ளார். இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், யார் கண்ணன் மற்றும் முருகானந்தம், பல்லவி குமார், கோவை சிவா ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MzI1MjPSAQA?oc=5