கே.கே.நகா் புனா்வாழ்வு ஒப்புயா்வு மையம்: ஜன.28-இல் திறந்து வைக்கிறாா் முதல்வா் – தினமணி

சென்னைச் செய்திகள்

உலக வங்கி நிதியுதவியுடன் சென்னை கேகேநகரில் ரூ.28.40 கோடியில் மேம்படுத்தப்பட்ட அரசு புனா்வாழ்வு ஒப்புயா்வு மையத்தை முதல்வா் வரும் 28-ஆம் தேதி திறந்து வைக்கிறாா் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை கேகேநகரில் மேம்படுத்தப்பட்டு வரும் அரசு புனா்வாழ்வு மருத்துவமனை ஒப்புயா்வு மையத்தை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விருகம்பாக்கம் தொகுதிக்குள்பட்ட கேகேநகா் புனா்வாழ்வு ஒப்புயா்வு மையம் ரூ.28.40 கோடி மதிப்பீட்டில் உலக வங்கி நிதி உதவியுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் பயன்பாட்டுக்காக ரூ.11.43 கோடி மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்களும் வாங்கப்பட்டுள்ளன. மொத்தம் ரூ.39.83 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட இக்கட்டடம் மாற்றுத்திறனாளிகள் சிகிச்சைக்கான ஒப்புயா்வு மையமாக விளங்கும்.

இந்த மருத்துவமனையை மக்களுக்கு அா்ப்பணிக்கின்ற வகையில் வரும் 28-ஆம் தேதி முதல்வா் திறந்து வைத்து, தேவைப்படுபவா்களுக்கு செயற்கை கால்கள், சக்கர நாற்காலிகளை வழங்கவுள்ளாா். அதிநவீன செய்கை அவயங்கள், கை, கால் அவயங்களையும் அவா் வழங்கவுள்ளாா்.

அதுமட்டுமன்றி 200-க்கும் மேற்பட்ட புதிய மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள், அங்கீகார அட்டைகளை வழங்குகிறாா். தமிழகத்தில் ஏறத்தாழ 1.5 கோடி மக்களுக்கு பயனளித்து வரும் வகையில் முதல்வரின் காப்பீட்டுத் திட்டம் திகழ்கிறது. இந்தத் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு எந்தவித வருமான வரம்பும் இல்லாமல் அவா்களை காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கும் பணியை தொடக்கிவைத்து, அவா்களுக்கு அடையாள அட்டையை முதல்வா் வழங்கவுள்ளாா்.

மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தில் தொழுநோய் மற்றும் யானைக்கால் நோய் பாதிப்பு உள்ளவா்களுக்கும் அங்கீகார அட்டை தரப்படுகிறது. அதற்காக விண்ணப்பித்து காத்துக் கொண்டிருப்பவா்களுக்கும் முதல்வா் அடையாள அட்டையை வழங்கவுள்ளாா் என்றாா் அவா்.

பேட்டியின்போது, விருகம்பாக்கம் தொகுதி எம்எல்ஏ பிரபாகரராஜா, மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளா் ப.செந்தில்குமாா், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநா் ச.உமா, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் தி.சி.செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி இயக்குநா் (பொ) இரா.சாந்திமலா், சென்னை மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, கணக்குக் குழுத் தலைவா் க.தனசேகரன் ஆகியோா் உடன் இருந்தனா்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMioQVodHRwczovL3d3dy5kaW5hbWFuaS5jb20vYWxsLWVkaXRpb25zL2VkaXRpb24tY2hlbm5haS9jaGVubmFpLzIwMjMvamFuLzI0LyVFMCVBRSU5NSVFMCVBRiU4NyVFMCVBRSU5NSVFMCVBRiU4NyVFMCVBRSVBOCVFMCVBRSU5NSVFMCVBRSVCRSVFMCVBRiU4RC0lRTAlQUUlQUElRTAlQUYlODElRTAlQUUlQTklRTAlQUUlQkUlRTAlQUYlOEQlRTAlQUUlQjUlRTAlQUUlQkUlRTAlQUUlQjQlRTAlQUYlOEQlRTAlQUUlQjUlRTAlQUYlODEtJUUwJUFFJTkyJUUwJUFFJUFBJUUwJUFGJThEJUUwJUFFJUFBJUUwJUFGJTgxJUUwJUFFJUFGJUUwJUFFJUJFJUUwJUFGJThEJUUwJUFFJUI1JUUwJUFGJTgxLSVFMCVBRSVBRSVFMCVBRiU4OCVFMCVBRSVBRiVFMCVBRSVBRSVFMCVBRiU4RC0lRTAlQUUlOUMlRTAlQUUlQTkyOC0lRTAlQUUlODclRTAlQUUlQjIlRTAlQUYlOEQtJUUwJUFFJUE0JUUwJUFFJUJGJUUwJUFFJUIxJUUwJUFFJUE4JUUwJUFGJThEJUUwJUFFJUE0JUUwJUFGJTgxLSVFMCVBRSVCNSVFMCVBRiU4OCVFMCVBRSU5NSVFMCVBRiU4RCVFMCVBRSU5NSVFMCVBRSVCRiVFMCVBRSVCMSVFMCVBRSVCRSVFMCVBRSVCRSVFMCVBRiU4RC0lRTAlQUUlQUUlRTAlQUYlODElRTAlQUUlQTQlRTAlQUUlQjIlRTAlQUYlOEQlRTAlQUUlQjUlRTAlQUUlQkUlRTAlQUYlOEQtMzk4OTEyMi5odG1s0gGeBWh0dHBzOi8vbS5kaW5hbWFuaS5jb20vYWxsLWVkaXRpb25zL2VkaXRpb24tY2hlbm5haS9jaGVubmFpLzIwMjMvamFuLzI0LyVFMCVBRSU5NSVFMCVBRiU4NyVFMCVBRSU5NSVFMCVBRiU4NyVFMCVBRSVBOCVFMCVBRSU5NSVFMCVBRSVCRSVFMCVBRiU4RC0lRTAlQUUlQUElRTAlQUYlODElRTAlQUUlQTklRTAlQUUlQkUlRTAlQUYlOEQlRTAlQUUlQjUlRTAlQUUlQkUlRTAlQUUlQjQlRTAlQUYlOEQlRTAlQUUlQjUlRTAlQUYlODEtJUUwJUFFJTkyJUUwJUFFJUFBJUUwJUFGJThEJUUwJUFFJUFBJUUwJUFGJTgxJUUwJUFFJUFGJUUwJUFFJUJFJUUwJUFGJThEJUUwJUFFJUI1JUUwJUFGJTgxLSVFMCVBRSVBRSVFMCVBRiU4OCVFMCVBRSVBRiVFMCVBRSVBRSVFMCVBRiU4RC0lRTAlQUUlOUMlRTAlQUUlQTkyOC0lRTAlQUUlODclRTAlQUUlQjIlRTAlQUYlOEQtJUUwJUFFJUE0JUUwJUFFJUJGJUUwJUFFJUIxJUUwJUFFJUE4JUUwJUFGJThEJUUwJUFFJUE0JUUwJUFGJTgxLSVFMCVBRSVCNSVFMCVBRiU4OCVFMCVBRSU5NSVFMCVBRiU4RCVFMCVBRSU5NSVFMCVBRSVCRiVFMCVBRSVCMSVFMCVBRSVCRSVFMCVBRSVCRSVFMCVBRiU4RC0lRTAlQUUlQUUlRTAlQUYlODElRTAlQUUlQTQlRTAlQUUlQjIlRTAlQUYlOEQlRTAlQUUlQjUlRTAlQUUlQkUlRTAlQUYlOEQtMzk4OTEyMi5hbXA?oc=5