குட்கா, பான் மசாலா தடை உத்தரவு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த உத்தரவை இன்று சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

2006ஆம் ஆண்டு இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா மற்றும் புகையூட்டப்படும் புகையிலைப் போன்ற பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். ஆண்டுதோறும் இந்த உத்தரவு தொடர்பாக அறிவிப்பு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு வந்தன.

இந்த உத்தரவுகளை மீறியதாக சில நிறுவனங்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் அரசுடைய அறிவிப்பு ஆணையை எதிர்த்தும், அந்த குற்ற நடவடிக்கைகளை எதிர்த்தும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகள் அனைத்தையும் விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் குமரேஷ் பாபு அடங்கிய அமர்வில், உணவு பாதுகாப்பு சட்டத்தில் புகையிலையை உணவுப் பொருளாக சுட்டிக்காட்டவில்லை என்றும், புகையிலை சிகரெட் போன்ற பொருட்களின் விளம்பரங்களை முறைப்படுத்துவதுப் பற்றி மட்டும் தான் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும், தடை உத்தரவை மீறியதாக எடுக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளையும் ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்பு சட்டத்தில் அவசர நிலை கருதி தற்காலிகமாக தடை செய்ய மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMia2h0dHBzOi8vdGFtaWwuaW5kaWFuZXhwcmVzcy5jb20vdGFtaWxuYWR1L2NvdXJ0cy9jaGVubmFpLWhpZ2gtY291cnQtY2FuY2Vscy1iYW4tb24tZ3V0a2EtcGFuLW1hc2FsYS01ODIzMTIv0gFwaHR0cHM6Ly90YW1pbC5pbmRpYW5leHByZXNzLmNvbS90YW1pbG5hZHUvY291cnRzL2NoZW5uYWktaGlnaC1jb3VydC1jYW5jZWxzLWJhbi1vbi1ndXRrYS1wYW4tbWFzYWxhLTU4MjMxMi9saXRlLw?oc=5