சென்னையைச் சுற்றி இப்படியும் கூட சுற்றுலா தலங்கள் உள்ளனவா? – BBC

சென்னைச் செய்திகள்

இன்று தேசிய சுற்றுலா தினம். சென்னையிலிருந்து ஒரு நாளில் சென்று வரக்கூடிய சுற்றுலா தலங்கள் எவை? அவை குறித்த விரிவான தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

தடா அருவி

சென்னையின் பரபரப்பிலிருந்து சற்று விடுபடலாம் என்று நினைப்பவர்களின் மனதில் முதலில் தோன்றும் இடம் தடா அருவி எனப்படும் உப்பலமுடுகு அருவி. சென்னையில் இருந்து ஒரு நாளில் சென்றுவர முடியும் என்றாலும், இந்தப் பகுதி ஆந்திர மாநிலத்தில் அமைந்திருக்கிறது.

சென்னையிலிருந்து சுமார் 80 கி.மீ. தூரத்தில் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் சித்துலிய கோனா என்ற அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் அமைந்திருக்கிறது இந்த அருவி.

அருவி இருக்கும் இடம்வரை வாகனத்தில் செல்ல முடியாது. வாகனத்தை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு, சில கி.மீ. தூரம் காட்டுப் பகுதியில் நடந்து செல்ல வேண்டும். கரடுமுரடான காட்டுப் பாதையில் நடந்துசெல்வது சற்று கடினமானது என்றாலும், பசுமையான காட்டுப் பகுதியும், ஆங்காங்கே தென்படும் சிறு அருவிகளும் மனதிற்கு உற்சாகமளிக்கும்.

செல்வதற்கு சிறந்த காலகட்டம்: அக்டோபர் முதல் பிப்ரவரி வரை செல்லலாம். அதற்குப் பிந்தைய காலகட்டத்தில் வெயில் அதிகமாக இருக்கும்.

எப்படிச் செல்வது: திருப்பதி மாவட்டத்தில் வரதைய்யாபாளையம் என்ற கிராமத்தை அடைந்து அங்கிருந்து செல்ல வேண்டும். பல ரயில்களும் பேருந்துகளும் தடா வழியாகச் செல்கின்றன. தடா ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோ, ஷேர் ஆட்டோ மூலம் மலையடிவாரத்தை அடையலாம். மலையடிவாரத்திலிருந்து அருவிக்குச் செல்ல மேலே ஏற வேண்டும். மலையடிவாரத்தில் இருந்து 150 மீட்டர் தூரத்தில் ஒரு சிறிய அருவி உள்ளது. அதைத் தாண்டியும் மேலே செல்லலாம். ஆனால், வயதானவர்கள் ஏறிச் செல்வது சற்றுக் கடினம்.

அருகில் உள்ள பிற இடங்கள்: ஒன்னஸ் டெம்பிள், பழவேற்காடு ஏரி.

பழவேற்காடு ஏரி

பழவேற்காடு ஏரி

பட மூலாதாரம், TOURISM DEPT

ஒடிஷாவில் உள்ள சில்கா ஏரிக்கு அடுத்தபடியாக இந்தியாவின் மிகப் பெரிய உப்பு நீர் ஏரி இது. வங்காள விரிகுடா கடலில் இருந்து இந்த ஏரியை, ஸ்ரீஹரி கோட்டா தீவு பிரிக்கிறது. சென்னையில் இருந்து சுமார் அறுபது கி.மீ. தூரத்தில் ஆந்திர மாநில எல்லையில் இந்த ஏரி அமைந்திருக்கிறது. சுவர்ணமுகி, காலாங்கி, ஆரணி ஆறுகள் இந்த ஏரியை உருவாக்குகின்றன.

பழவேற்காடு தற்போது ஒரு சிறு நகரமாகக் காட்சியளித்தாலும், நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு பகுதி இது. 1515ல் போர்ச்சுகீசியர்கள் இங்கே ஒரு தேவாலயத்தைக் கட்டினர். 1609ஆம் ஆண்டு காலப் பகுதியில் டச்சுகாரர்கள் இங்கே குடியேறி ஜெல்டீரியா என்ற கோட்டை ஒன்றைக் கட்டினர். 1825ஆம் ஆண்டு இந்த இடம் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் வந்ததையடுத்து, சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக மாறியது.

பார்க்கக்கூடிய இடங்கள்: பழவேற்காடு ஏரிக்கு எதிரே உள்ள பழங்கால கலங்கரை விளக்கம் பார்க்கத்தகுந்த ஒன்று. அக்டோபர் முதல் மார்ச் மாதம்வரை, வலசை செல்லும் ஆயிரக்கணக்கான பறவைகள் இங்கே வருகின்றன. இந்தக் காலகட்டத்தில் பூ நாரைகளை பெரும் எண்ணிக்கையில் இங்கே காண முடியும்.

வரலாற்றில் ஆர்வம் கொண்டவர்கள் பழைய கிறிஸ்தவ தேவாலயம், பாழடைந்த கோட்டையின் பகுதிகள், 1631 முதல் 1655வரையில் உருவான டச்சுக்காரர்களின் கல்லறைகள் ஆகியவற்றைப் பார்வையிடலாம். இந்தப் பகுதிக்குச் செல்வோர், முற்றிலும் ஒரு மாறுபட்ட நிலப்பரப்பிற்குச் சென்று வந்த உணர்வைப் பெறலாம்.

செல்லும் வழி: சென்னையில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. ரயில் மூலம் சென்றால், தடா ரயில் நிலையத்தில் இறங்கி, சுமார் பத்து கி.மீ. பயணம் செய்ய வேண்டும்.

அலம்பரைக் கோட்டை

1736 முதல் 1740 வரை முகலாயப் பேரரசுக் காலத்தில் கட்டப்பட்ட கோட்டை இது. 15 ஏக்கர் நிலப்பரப்பில் செங்கலாலும் சுண்ணாம்பாலும் கட்டப்பட்ட இந்தக் கோட்டை துவக்கத்தில் ஆற்காடு நவாப் தோஸ்தே அலிகான் கட்டுப்பாட்டில் இருந்தது. 1750ஆம் ஆண்டில், பிரபல பிரெஞ்சு தளபதி தூப்ளே சுபேதர் முசார்ஃபர்சாங்கிற்கு செய்த உதவிகளுக்காக இந்தக் கோட்டை பிரெஞ்சுக்காரர்களுக்கு வழங்கப்பட்டது. கி.பி 1760ல் பிரெஞ்சுக்காரர்களை ஆங்கிலேயர்கள் தோற்கடித்தபோது கோட்டை கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. எஞ்சியிருந்த இடிபாடுகள், 2004ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமியில் மேலும் சேதமடைந்தன.

புதுச்சேரியின் பிரெஞ்சுத் தளபதி தூப்ளே, அவருடைய துபாஷி அனந்தரங்கம் பிள்ளை ஆகியோரின் குறிப்புகளில் இந்தக் கோட்டை குறிப்பிடப்படுகிறது.

சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் செங்கலாலும் சுண்ணாம்பாலும் கட்டப்பட்ட இந்தக் கோட்டையின் இடிபாடுகள், பார்வையாளர்களைக் கடந்த காலத்திற்கே அழைத்துச் செல்பவை. கோட்டையின் பெரும் பகுதி கடலுக்குள் சென்றுவிட்ட நிலையில், மீதமுள்ள கோட்டைப் பகுதிகள் மணல் நிறைந்து காணப்படுகின்றன.

தமிழ்நாட்டில் அதிகம் அறியப்படாத சுற்றுலாத் தளங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. பிதாமகன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் இந்தக் கோட்டையில் எடுக்கப்பட்டிருக்கின்றன.

எப்படிச் செல்வது: சென்னையிலிருந்து சுமார் 105 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள கடப்பாக்கம் என்ற கிராமத்திற்குச் சென்று, அங்கிரு்நது கிழக்கு நோக்கி 3 கி.மீ. தூரம் பயணம் செய்தால் இந்தக் கோட்டையை அடையலாம். புதுச்சேரியிலிருந்து சுமார் 40 கி.மீ. தூரத்தில் இந்தக் கோட்டை அமைந்துள்ளது.

மாமல்லபுரம்

மாமல்லபுரம்

பட மூலாதாரம், Getty Images

சென்னையில் வசிப்பவர்களுக்கு, சுற்றுலா சென்றுவர வேண்டும் என்று நினைத்தால் முதலில் மனதில் தோன்றும் இடம் மகாபலிபுரம்தான். கடற்கரைப் பகுதியில் அமைந்திருக்கும் மாமல்லபுரம், தமிழ்நாட்டின் மிக முக்கியமான தொல்லியல் தளங்களில் ஒன்று. ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து நரசிம்மவர்மப் பல்லவனால் கட்டப்பட்ட கோவில்கள், குடைவரைகள் இங்கே காணப்படுகின்றன.

இங்குள்ள தொல்லியல் தளங்களில், கடற்கரையை ஒட்டியுள்ள கடற்கரைக் கோவில் மிக முக்கியமானது. தமிழ்நாட்டில் உள்ள மிகப் பழமையான கோவில் இதுதான். இது மட்டுமல்லாமல், ஐந்து ரதங்கள், அர்ச்சுனன் தவம், புலி குகை, வராஹ குகைக் கோவில், கிருஷ்ணனின் வெண்ணெய் உருண்டை, கலங்கரை விளக்கம் ஆகியவை இங்கு காணத்தக்கவை.

சென்னையிலிருந்து சுமார் 60 கி.மீ. தூரத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள மாமல்லபுரத்திற்கு அடிக்கடி பேருந்து வசதிகள் இருக்கின்றன. பௌர்ணமி தினத்தன்று கடற்கரை கோவில் அருகில் உள்ள மணற் பரப்பில் இருந்து கடலை ரசிப்பது, மிகச் சிறந்த அனுபவமாக இருக்கும்.

வேடந்தாங்கல்

சென்னைக்கு அருகில் அமைந்துள்ள வேடந்தாங்கல், இந்தியாவின் சிறிய பறவைகள் சரணாலயங்களில் மிக முக்கியமான ஒன்று. இதன் மொத்தப் பரப்பே சுமார் 50 ஹெக்டேர்தான். இருந்தபோதும் குறிப்பிட்ட காலகட்டத்தில் 35,000க்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு வருவதால், மிகுந்த முக்கியத்துவத்தை இந்த சரணாலயம் பெற்றிருக்கிறது. 18ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்தே பிரபலமாக இருந்த இந்தப் பகுதி, 1797ல் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

சென்னையிலிருந்து சுமார் 73 கி.மீ. தூரத்தில் இந்த இடம் அமைந்திருக்கிறது. சென்னையிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் ஜி.எஸ்.டி. சாலை வழியாகச் சென்று, இந்த இடத்தை அடையலாம். அக்டோபர் மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரை இந்தப் பகுதி முழுக்கவும் நீர் நிரம்பி காட்சியளிக்கும். இதுவே பறவைகளைக் காணச் சிறந்த காலகட்டமாகும்.

இந்த சரணாலயத்திற்கு உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் சுமார் 35,000க்கும் மேற்பட்ட பறவைகள் வருகின்றன. கிளுவை, ஊசிவால் வாத்து, நீலச்சிறகி, தட்டைவாயன், பச்சைக்காலி, பவளக்காலி போன்ற வெளிநாட்டுப் பறவைகளும் உண்ணிக்கொக்கு, சின்னக் கொக்கு, சிறிய நீர்க்காகம், கூழைக்கடா, மஞ்சள் மூக்கு நாரை, பாம்புத்தாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், மடையான், நத்தை குத்தி நாரை, முக்குளிப்பான் உள்ளிட்ட உள்நாட்டுப் பறவைகளும் இங்கே வருகின்றன.

பறவைகளைக் காண விரும்புவோர் அதிகாலை நேரத்தில் இங்கே செல்ல வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்துசெல்லக்கூடிய மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்று. மதுராந்தகம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் இருந்து இந்த இடத்தை எளிதில் அடையலாம்.

வேடந்தாங்கல்

பட மூலாதாரம், Getty Images

கைலாசநாதர் கோவில்

சென்னைக்கு அருகில் உள்ள காஞ்சிபுரம் நகரம் பல கோவில்களுக்குப் புகழ்பெற்ற நகரம் என்றாலும், அங்குள்ள கைலாசநாதர் கோவில் வரலாற்று ரீதியிலும் தொல்லியல் ரீதியிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் மாமல்லபுரம் கோவிலுக்கு அடுத்தபடியாக மிகவும் பழைய கோவில் இதுதான்.

1300 ஆண்டுகளுக்கு முன்பாக பல்லவ மன்னன் ராஜசிம்மனால் கட்டத் துவங்கப்பட்ட இந்தக் கோவில், பல்லவக் கோவில் கட்டடக் கலையின் உச்சம் எனச் சொல்ல முடியும். பிரதான கோயிலிலும், அதைச் சுற்றிலும் உள்ள துணைக் கோயில்களிலும் சுமார் 1300 வருடங்களுக்கு மேற்பட்ட பல்லவர் கால ஓவியங்கள் காணக்கிடைக்கின்றன. சில ஓவியங்கள் மீது விஜய நகரப் பேரரசர் காலத்தில் புதிய ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கோவில் கலையிலும் தொல்லியலிலும் ஆர்வம் கொண்டவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய கோவில் இது.
இங்குள்ள பல்லவர் கால கிரந்தக் கல்வெட்டுகள் கூட மிகுந்த கலைத்திறனுடன் செதுக்கப்பட்டுள்ளன.

சென்னையிலிருந்து சுமார் 70 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கி.மீ. தூரத்தில் இந்தக் கோவில் அமைந்துள்ளது. சென்னை – காஞ்சிபுரம் இடையே பெரும் எண்ணிக்கையில் பேருந்துகள் சென்றுவருகின்றன.

சதுரங்கப்பட்டினம்

சென்னையிலிருந்து சுமார் 70 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள சதுரங்கப்பட்டனம், ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம். காலனி ஆதிக்க காலத்தில் இந்த இடம் சத்ராஸ் என்று அழைக்கப்பட்டது.

1622ஆம் ஆண்டுவாக்கில் நெதர்லாந்து வணிகர்களால் இங்கே ஒரு கோட்டை கட்டப்பட்டது. மிகப் பெரிய தானியக் கிடங்கு, குதிரை லாயம், யானை கட்டுமிடம், சமையல்கூடம், வடிகால் வசதிகள், மிகப் பெரிய மதில்கள் ஆகியவற்றுடன் இந்தக் கோட்டை கட்டப்பட்டது. இந்த மதில்களின் மீது பீரங்கிகளும் நிறுவப்பட்டிருந்தன. இவற்றில் பெரும்பாலானவை அழிந்துவிட்ட நிலையில், கோட்டையின் வசிப்பட அறையும், தானியக்கிடங்கும் தற்போது எஞ்சியிருக்கின்றன. 1854ல் சதுரங்கப்பட்டினம் கிழக்கிந்தியக் கம்பனியின் வசமானது.

இந்தக் கோட்டைக்குள் 1620க்கும் 1769க்கும் இடைப்பட்ட காலத்தில் பயன்பாட்டில் இருந்த கல்லறை ஒன்றும் உள்ளது. பல கல்லறைகளின் மேல் பதிக்கப்பட்டுள்ள கற்கள் மிக அழகிய வேலைப்பாடுகளைக் கொண்டவை.

சிதிலமைடைந்த கோட்டையின் ஒரு பகுதியும் சில அறைகளுமே எஞ்சியிருப்பதால், வரலாற்று ஆர்வமுடையோருக்கு மட்டும் ஈர்ப்புடைய ஒரு இடமாக இருக்கும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiL2h0dHBzOi8vd3d3LmJiYy5jb20vdGFtaWwvYXJ0aWNsZXMvY3E1cXhqZHo5MjVv0gEzaHR0cHM6Ly93d3cuYmJjLmNvbS90YW1pbC9hcnRpY2xlcy9jcTVxeGpkejkyNW8uYW1w?oc=5