கோயில் நிதியை அறநிலையத் துறை செலவுகளுக்கு பயன்படுத்த முடியாது: சென்னை உயா்நீதிமன்றம் – தினமணி

சென்னைச் செய்திகள்

இந்து சமய அறநிலையத் துறைக்கு தேவையான செலவுகளை கோயில் நிதியிலிருந்து மேற்கொள்ள முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்தது.

அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் நிதியில் கல்லூரிகள் தொடங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், கோயில் நிதியை தவறாக பயன்படுத்துவதை எதிா்த்தும் சென்னை உயா்நீதிமன்றத்தில் ரமேஷ் என்பவா் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா், கோயில் நிதியில் அறநிலையத் துறை ஆணையா், இணை ஆணையா்கள், ஆய்வாளா்கள் அலுவலகங்களில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவும், முந்தைய ஆட்சியில் அமைச்சருக்கு வாகனங்கள் வாங்கவும், கணினிமயமாக்கவும், பேருந்து நிலைய விரிவாக்கத்துக்கும், மண்டபங்கள், பக்தா்கள் தங்கும் விடுதிகள் கட்டவும் பயன்படுத்தப்படுவதாக, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்களை சமா்ப்பித்தாா்.

மேலும், கோயில்களை நிா்வகிப்பதற்காக நிா்வாகக் கட்டணமாக மொத்த வருமானத்தில் 12 சதவீதம் வழங்கப்படும் நிலையில், கோயில் நிதி அறநிலையத் துறைக்காக பயன்படுத்தப்படுகிறது. எந்த தயக்கமும் இல்லாமல் கோயில் நிதி அரசு நிதி போல பயன்படுத்தப்படுகிறது. இதுதொடா்பாக சிறப்பு தணிக்கை செய்தால் அனைத்து தகவல்களும் அம்பலமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயில் நிதியை தேவையில்லாமல் வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்த முடியாது. அறநிலையத் துறை செலவுகளுக்கு தொகுப்பு நிதியில் இருந்து செலவழிக்க வேண்டும். அறநிலையத் துறைக்கு தேவையான செலவுகளை கோயில் நிதியில் இருந்து மேற்கொள்ள முடியாது. கண்காணிப்பு என்ற பெயரில் கோயில் வளங்களை எடுக்க முடியாது எனக் கூறி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை பிப். 8-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனா்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMi6AVodHRwczovL3d3dy5kaW5hbWFuaS5jb20vdGFtaWxuYWR1LzIwMjMvamFuLzI2LyVFMCVBRSU5NSVFMCVBRiU4QiVFMCVBRSVBRiVFMCVBRSVCRiVFMCVBRSVCMiVFMCVBRiU4RC0lRTAlQUUlQTglRTAlQUUlQkYlRTAlQUUlQTQlRTAlQUUlQkYlRTAlQUUlQUYlRTAlQUYlODgtJUUwJUFFJTg1JUUwJUFFJUIxJUUwJUFFJUE4JUUwJUFFJUJGJUUwJUFFJUIyJUUwJUFGJTg4JUUwJUFFJUFGJUUwJUFFJUE0JUUwJUFGJThELSVFMCVBRSVBNCVFMCVBRiU4MSVFMCVBRSVCMSVFMCVBRiU4OC0lRTAlQUUlOUElRTAlQUYlODYlRTAlQUUlQjIlRTAlQUUlQjUlRTAlQUYlODElRTAlQUUlOTUlRTAlQUUlQjMlRTAlQUYlODElRTAlQUUlOTUlRTAlQUYlOEQlRTAlQUUlOTUlRTAlQUYlODEtJUUwJUFFJUFBJUUwJUFFJUFGJUUwJUFFJUE5JUUwJUFGJThEJUUwJUFFJUFBJUUwJUFFJTlGJUUwJUFGJTgxJUUwJUFFJUE0JUUwJUFGJThEJUUwJUFFJUE0LSVFMCVBRSVBRSVFMCVBRiU4MSVFMCVBRSU5RiVFMCVBRSVCRiVFMCVBRSVBRiVFMCVBRSVCRSVFMCVBRSVBNCVFMCVBRiU4MS0tJUUwJUFFJTlBJUUwJUFGJTg2JUUwJUFFJUE5JUUwJUFGJThEJUUwJUFFJUE5JUUwJUFGJTg4LSVFMCVBRSU4OSVFMCVBRSVBRiVFMCVBRSVCRSVFMCVBRiU4RCVFMCVBRSVBOCVFMCVBRiU4MCVFMCVBRSVBNCVFMCVBRSVCRiVFMCVBRSVBRSVFMCVBRSVBOSVFMCVBRiU4RCVFMCVBRSVCMSVFMCVBRSVBRSVFMCVBRiU4RC0zOTkwMTk1Lmh0bWzSAeUFaHR0cHM6Ly9tLmRpbmFtYW5pLmNvbS90YW1pbG5hZHUvMjAyMy9qYW4vMjYvJUUwJUFFJTk1JUUwJUFGJThCJUUwJUFFJUFGJUUwJUFFJUJGJUUwJUFFJUIyJUUwJUFGJThELSVFMCVBRSVBOCVFMCVBRSVCRiVFMCVBRSVBNCVFMCVBRSVCRiVFMCVBRSVBRiVFMCVBRiU4OC0lRTAlQUUlODUlRTAlQUUlQjElRTAlQUUlQTglRTAlQUUlQkYlRTAlQUUlQjIlRTAlQUYlODglRTAlQUUlQUYlRTAlQUUlQTQlRTAlQUYlOEQtJUUwJUFFJUE0JUUwJUFGJTgxJUUwJUFFJUIxJUUwJUFGJTg4LSVFMCVBRSU5QSVFMCVBRiU4NiVFMCVBRSVCMiVFMCVBRSVCNSVFMCVBRiU4MSVFMCVBRSU5NSVFMCVBRSVCMyVFMCVBRiU4MSVFMCVBRSU5NSVFMCVBRiU4RCVFMCVBRSU5NSVFMCVBRiU4MS0lRTAlQUUlQUElRTAlQUUlQUYlRTAlQUUlQTklRTAlQUYlOEQlRTAlQUUlQUElRTAlQUUlOUYlRTAlQUYlODElRTAlQUUlQTQlRTAlQUYlOEQlRTAlQUUlQTQtJUUwJUFFJUFFJUUwJUFGJTgxJUUwJUFFJTlGJUUwJUFFJUJGJUUwJUFFJUFGJUUwJUFFJUJFJUUwJUFFJUE0JUUwJUFGJTgxLS0lRTAlQUUlOUElRTAlQUYlODYlRTAlQUUlQTklRTAlQUYlOEQlRTAlQUUlQTklRTAlQUYlODgtJUUwJUFFJTg5JUUwJUFFJUFGJUUwJUFFJUJFJUUwJUFGJThEJUUwJUFFJUE4JUUwJUFGJTgwJUUwJUFFJUE0JUUwJUFFJUJGJUUwJUFFJUFFJUUwJUFFJUE5JUUwJUFGJThEJUUwJUFFJUIxJUUwJUFFJUFFJUUwJUFGJThELTM5OTAxOTUuYW1w?oc=5