சென்னை வாலிபருக்கு 20 ஆண்டு சிறை – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

புதுச்சேரி

புதுச்சேரியை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்த வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

குழந்தை திருமணம்

சென்னையை சேர்ந்தவர் விஜி என்ற விஜய் (வயது 29). கூலித்தொழிலாளி. இவரது தாயார் லதா. இந்தநிலையில் விஜி புதுவையை சேர்ந்த தனது உறவினரின் 16 வயது சிறுமியை கடந்த 2020-ம் ஆண்டு கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில் வில்லியனூர் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ, குழந்தை திருமணம், 363 (கடத்தல்), 344 (வலுக்கட்டாயமாக சிறைப்படுத்துதல்) ஆகிய உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் விஜி, அவரது தாயார் லதா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

20 ஆண்டு சிறை

இதுதொடர்பான வழக்கு புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி செல்வநாதன் முன்னிலையில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட விஜிக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், குழந்தை திருமணம் சட்டத்தின் கீழ் ஒரு ஆண்டும், 363- கடத்தல் பிரிவின் கீழ் 7 ஆண்டும், ரூ.ஆயிரம் அபராதமும், 344-ன் கீழ் 2 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதனை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். மேலும் லதாவுக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பச்சையப்பன் வாதாடினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiWmh0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vbmV3cy9wdWR1Y2hlcnJ5L2NoZW5uYWktdGVlbmFnZXItZ2V0cy0yMC15ZWFycy1pbi1qYWlsLTg4NjA0MNIBXmh0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vYW1wL25ld3MvcHVkdWNoZXJyeS9jaGVubmFpLXRlZW5hZ2VyLWdldHMtMjAteWVhcnMtaW4tamFpbC04ODYwNDA?oc=5