சென்னையில் 167 ஆண்டுகள் பழமையான ரயில் இயக்கம் – நக்கீரன்

சென்னைச் செய்திகள்

 

 

குடியரசு தின விழாவினை ஒட்டி சென்னையில் பாரம்பரிய ரயில் இயக்கப்பட்டது.

 

74வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. சென்னை உழவர் சிலை அருகே நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இவ்விழாவில் முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். முப்படை, காவல்துறை அணிவகுப்பு மரியாதை மற்றும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ஆகியவையும் நடைபெற்றது.

 

அதேபோல், குடியரசு தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை எழும்பூரிலிருந்து கோடம்பாக்கம் வரையில் பழமையான நீராவி எஞ்சின் ரயில் இயக்கப்பட்டது. உலகின் பழமையான ரயில் எஞ்சின் ‘இஐஆர் – 21’ இங்கிலாந்தில் 1855 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது. 167 ஆண்டுகள் பழமையான இந்த ரயில் 1909 ஆம் ஆண்டு வரை மக்கள் பயன்பாட்டில் இருந்தது. ஓய்வு பெற்ற பின் ஜமால்பூர், ஹவுரா போன்ற ரயில் நிலையங்களில் மக்களின் பார்வைக்காக வைத்து  பராமரிக்கப்பட்டு வந்தது. 

 

தற்போது இந்த ரயில் சென்னை பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் பணிமனையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகிய நாட்களில் மட்டும் இயக்கப்படும் இந்த ரயில் எஞ்சின், இன்று கொண்டாடப்பட்ட குடியரசு தின விழாவில் சென்னை எழும்பூரிலிருந்து கோடம்பாக்கத்துக்கு இயக்கப்பட்டது. இந்த இயக்கத்தினை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் துவக்கி வைத்தார். இந்த ரயிலில் ரயில்வே துறை அதிகாரிகள் பயணம் செய்தனர். இதில் பொதுமக்கள் பயணம் செய்ய முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiVmh0dHBzOi8vd3d3Lm5ha2toZWVyYW4uaW4vMjQtYnktNy1uZXdzL3RoYW1pemhhZ2FtL3RyYWRpdGlvbmFsLXRyYWluLW9wZXJhdGlvbi1jaGVubmFp0gFaaHR0cHM6Ly93d3cubmFra2hlZXJhbi5pbi8yNC1ieS03LW5ld3MvdGhhbWl6aGFnYW0vdHJhZGl0aW9uYWwtdHJhaW4tb3BlcmF0aW9uLWNoZW5uYWk_YW1w?oc=5