சென்னை-பெங்களூரு விரைவு சாலை பணிகள் 15 சதவீதம் நிறைவு: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல் – Maalaimalar தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னை:

சென்னை-பெங்களூரு இடையேயான 326 கி.மீ. தூரத்துக்கான விரைவு சாலையில் தினமும் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணப்பட்டு வருகின்றன. இந்த சாலை மார்க்கமாக சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல சுமார் 5 முதல் 7 மணி நேரம் வரை ஆகிறது. இதனை மாற்றி அமைக்கும் விதமாகவும், வாகன ஓட்டிகளுக்கு பயண அனுபவத்தை இனிமையானதாக மாற்றுவதற்காகவும் சாலைப் பணிகள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, குடிப்பாலா-வாலாஜாப்பேட்டை இடையே 24 கி.மீ. தூரத்துக்கும், வாலாஜாப்பேட்டை-அரக்கோணம் இடையே 24.5 கி.மீ. தூரத்துக்கும், அரக்கோணம்-காஞ்சிபுரம் இடையே 25.5 கி.மீ. தூரத்துக்கும், காஞ்சிபுரம்-ஸ்ரீபெரும்புதூர் இடையே 32.1 கி.மீ. தூரத்துக்கும் என 4 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு மொத்தம் 106.1 கி.மீ. தூரத்துக்கு விரைவுச் சாலைப் பணிகள் நடைபெறுகின்றன.

106.1 கி.மீ. தூரத்தில் சுமார் 10 கி.மீ. தூரத்துக்கான பகுதிகள் ஆந்திர மாநிலத்துக்குட்பட்ட பகுதிகளாக இருக்கிறது. இதைத் தவிர 96.1 கி.மீ. தூரம் தமிழ்நாட்டுக்குட்பட்ட பகுதியாக உள்ளது.

இந்த சாலை பணிகளுக்காக தமிழ்நாட்டில் 833.91 ஹெக்டேர் நிலம் கையக்கப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் 95 சதவீத நிலம் கையகப்படுத்தப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள நிலங்கள் விரைவில் கையகப்படுத்தப்பட உள்ளதாகவும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவிக்கிறது.

சாலைப் பணிகளின் வடிவமைப்பின்படி, தமிழ்நாட்டில் இந்த திட்டத்தில் 54 பாலங்கள், 13 வாகன சுரங்கப்பாதைகள் மற்றும் சுங்கச்சாவடிகள் அமைய உள்ளன.

சென்னை-பெங்களூரு தொழில்துறை வழித்தடங்களுக்காக முன்னுரிமை அளிக்கப்படும் திட்டமாக இது கருதப்படுகிறது. மொத்தம் பணிகள் நடைபெறும் 96.1 கி.மீ. தூரத்தில், 14.4 கி.மீ. தூரத்துக்கான பணிகள் நிறைவு பெற்று இருப்பதாகவும், மீதமுள்ள பணிகள் 15 முதல் 16 மாதங்களுக்குள் முடிவடைய இருப்பதாகவும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதாவது, 100 சதவீத பணிகளில், தற்போது 15 சதவீத பணிகள் முடிந்து இருக்கின்றன.

அனைத்து பணிகளும் முடிவடைந்தவுடன், சென்னை-பெங்களூரு இடையே ஏற்கனவே இருக்கும் பயண நேரமான 5 மணி முதல் 7 மணி வரையிலான காலம், 2 முதல் 3 மணி நேரம் வரை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கர்நாடகா-ஆந்திரா-தமிழ்நாடு வழியாக செல்லும் சென்னை-பெங்களூரு விரைவுச்சாலை பணிகள் ரூ.16 ஆயிரத்து 730 கோடி மதிப்பில் முடிக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiZmh0dHBzOi8vd3d3Lm1hYWxhaW1hbGFyLmNvbS9uZXdzL3N0YXRlLzE1LXBlcmNlbnQtY29tcGxldGlvbi1vZi1jaGVubmFpLXRvLWJlbmdhbHVydS1leHByZXNzd2F5LTU2NTIzNtIBamh0dHBzOi8vd3d3Lm1hYWxhaW1hbGFyLmNvbS9hbXAvbmV3cy9zdGF0ZS8xNS1wZXJjZW50LWNvbXBsZXRpb24tb2YtY2hlbm5haS10by1iZW5nYWx1cnUtZXhwcmVzc3dheS01NjUyMzY?oc=5