மகிழ்ச்சியான செய்தி: தயாராகி வரும் சென்னை – பெங்களூரு அதிவிரைவுச் சாலை – தினமணி

சென்னைச் செய்திகள்

தயாராகி வரும் சென்னை – பெங்களூரு அதிவிரைவுச் சாலை

சென்னை: சென்னை- பெங்களூரு இடையேயான 96 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட அதிவிரைவுச் சாலையின் 15 சதவீதம் அதாவது தமிழகத்தின் பகுதியில் அமைந்த 14 கிலோ மீட்டர் தொலைவுக்கு நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றிருப்பதாக் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தரப்பில் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, வரும் 15 – 16 மாதங்களில், ஒட்டுமொத்தமாக சென்னை – பெங்களூரு அதிவிரைவுச் சாலை தயாராகிவிடும் என்கிறார்கள்.

மழையின் போது இப்பணிகளைத் தொடர்வது சவாலாக இருந்தது. குளங்கள் மற்றும் ஏரிகள் நிரம்பியதால், இப்பணிகளில் தொய்வு கடினமாக இருந்தது, ஆனால் இப்போது தண்ணீர் குறையத் தொடங்கியதால், நீர்நிலைகளால் சிக்கல் ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது”என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் இந்த திட்டத்துக்காக 833 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 95 சதவீத இடங்கள் ஏற்கனவே கையகப்படுத்தப்படிருந்தது.  மீதம் விரைவில் கையகப்படுத்துப்படும். தமிழகத்தில் நடந்து வரும் சாலை அமைக்கும் பணிகள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 24 கிலோ மீட்டர் தொலைவுள்ள குடிபாலா – வாலாஜாபேட்டை, 24 கிலோ மீட்டர் தொலைவுள்ள வாலாஜாபேட்டை – அரக்கோணம், 25 கிலோ மீட்டர் தொலைவுள்ள அரக்கோணம் – காஞ்சிபுரம், 32 கிலோ மீட்டர் தொலைவுள்ள காஞ்சிபுரம் – ஸ்ரீபெரும்புதூர் என பிரிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

இதில் 10 கிலோ மீட்டர் தொலைவுள்ள சாலை ஆந்திர மாநிலத்துக்குள் வருகிறது. இந்த சாலையில் தமிழகத்தில் மட்டும் 54 மேம்பாலங்கள், 13 வாகன சுரங்கப் பாதைகள் மற்றும் சுங்கச்சாவடிகள் அமைக்கப்படவிருக்கின்றன.

இந்தச் சாலை, கர்நாடகம், ஆந்திரம் தமிழ்நாடு ஆகியவற்றை ஒன்றாக இணைக்கும் வகையில் உருவாகி வருகிறது. ரூ.16,730 கோடியில் உருவாகி வரும் இந்தச் சாலை தயாராகிவிட்டால், பெங்களூரு – சென்னை இடையேயான பயண நேரம் 2 முதல் 3 மணி நேரம் குறைந்துவிடும். தற்போதுள்ள 326 கிலோ மீட்டர் தொலைவைக் கடக்க ஐந்து முதல் ஏழு மணி நேரம் ஆகிறது. இந்தப் பாதையை நாள் ஒன்றுக்கு 75 ஆயிரம் வாகனங்கள் கடந்து செல்கின்றன என்பது புள்ளிவிவரம்.

தமிழகத்தில் மட்டும் ஏழு மாவட்டங்களை இந்த நெடுஞ்சாலை கடந்து செல்லும். இதனால், சென்னை – பெங்களூரு தொழில்வளம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMicWh0dHBzOi8vd3d3LmRpbmFtYW5pLmNvbS9pbmRpYS8yMDIzL2phbi8yNy9nb29kLW5ld3MtY2hlbm5haS1iZW5nYWx1cnUtZXhwcmVzc3dheS11bmRlci1jb25zdHJ1Y3Rpb24tMzk5MDk1Ni5odG1s0gFuaHR0cHM6Ly9tLmRpbmFtYW5pLmNvbS9pbmRpYS8yMDIzL2phbi8yNy9nb29kLW5ld3MtY2hlbm5haS1iZW5nYWx1cnUtZXhwcmVzc3dheS11bmRlci1jb25zdHJ1Y3Rpb24tMzk5MDk1Ni5hbXA?oc=5