சென்னை: பாதுகாப்பின்றி இடிக்கப்பட்ட பழைய கட்டிடம் – சாலையில் நடந்துசென்ற பெண் பலி – Puthiya Thalaimurai

சென்னைச் செய்திகள்

சென்னை அண்ணாசாலையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல், பழைய கட்டிடம் இடிக்கப்பட்டபோது விபத்து ஏற்பட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவன பெண் ஊழியர் பலியான சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த பாண்டி முருகேசன், பாண்டீஸ்வரி தம்பதியினரின் மகளான பத்மப்பிரியா பட்ட மேற்படிப்பு முடித்துவிட்டு சென்னை பம்மலில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கி சென்னையில் யுனைடெட் டெக்னோ என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 20-ம் தேதி பணியில் சேர்ந்த பிரியா தினமும் சென்னை விமான நிலையத்திலிருந்து, மெட்ரோ ரயில் மூலம் பணிக்கு சென்று வந்துள்ளார். அப்படி இன்று காலை ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கிரீம்ஸ் சாலையில் உள்ள நிறுவனத்திற்கு தனது சக ஊழியர் விக்னேஷ் ராஜாவுடன் நடந்து சென்றுள்ளார் அவர்.

அப்போது அண்ணா சாலையில் உள்ள சுரங்கப்பாதை வழியாக சென்றபோது அங்கு பழமை வாய்ந்த கட்டிடம் உரிய பாதுகாப்பில்லாமல் இடிக்கப்பட்டுள்ளது. அப்போது கட்டிடத்தின் ஒரு பகுதி சாலையில் விழுந்து உள்ளது. இதில் நடைபாதை வழியாக சென்ற பத்மப்பிரியா மற்றும் விக்னேஷ் ராஜா மீது சுவர் விழுந்ததில் உடல் நசுங்கி பத்மபிரியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விக்னேஷ் ராஜா பலத்த காயத்துடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தனியாருக்கு சொந்தமான பழைய கட்டிடத்தை பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாமல் இடித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

image

கட்டிடத்தின் 75% பகுதி இடிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அண்ணா சாலை வழியாக இருக்கக்கூடிய கட்டிடத்தின் முன் பகுதியை இடிக்காமல் வைத்துள்ளனர். கட்டிடத்தின் பெரும்பாலான பகுதி இடிக்கப்பட்டதால் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த முன்பகுதி இன்று காலை விழுந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி தான் பத்மபிரியா உயிரிழந்திருக்கிறார். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பத்மபிரியாவின் இறப்பு, அங்கிருந்தோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiXGh0dHBzOi8vd3d3LnB1dGhpeWF0aGFsYWltdXJhaS5jb20vbmV3c3ZpZXcvMTU0NjA5L3dvbWFuLWRpZWQtaW4tQ2hlbm5haS1Nb3VudC1Sb2FkLUFjY2lkZW500gFfaHR0cHM6Ly93d3cucHV0aGl5YXRoYWxhaW11cmFpLmNvbS9hbXAvYXJ0aWNsZS8xNTQ2MDkvd29tYW4tZGllZC1pbi1DaGVubmFpLU1vdW50LVJvYWQtQWNjaWRlbnQ?oc=5