அரசிடம் தீர்மானங்கள் அளிப்பு: எப்போது அமலுக்கு வருகிறது சென்னை பெருநகர் விரிவாக்கம்? – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் எல்லையை விரிவாக்கம் செய்வது தொடர்பான உள்ளாட்சி அமைப்பின் தீர்மானங்கள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) நிர்வாக எல்லையானது சென்னை மாவட்டம் தவிர்த்து அருகில் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களின் சில பகுதிகளை உள்ளடக்கி 1,189 சதுர கிமீ அளவுக்கு இருந்தது. இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நிர்வாக எல்லை விரிவாக்கம் தொடர்பான அறிவிப்பு வெளியானது.

அதில், சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்கள், அரக்கோணத்தையும் உள்ளடக்கி 8,878 சதுர கிமீ அளவில் சென்னை பெருநகர திட்டப் பகுதியின் எல்லை விரிவாக்கம் செய்ய முடிவெடுத்து, 1,709 கிராமங்கள் இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அரசாணை வெளியிடப்பட்டு மக்களின் கருத்துகள் கேட்கப்பட்டன.

இந்நிலையில், கடந்த அக்.11-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்பின் அக்.14-ம் தேதி விரிவாக்கத்துக்கு முதல்வர் ஒப்புதல் அளித்தார். குறிப்பாக, 8,878 சதுர கிமீக்கு பதில், 5,904 சதுர கிமீ அளவுக்கு விரிவாக்கம் செய்ய முடிவெடுத்து, ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, விரைவில் இந்த விரிவாக்க பணிகள் நிறைவு பெறும் என்று சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “கடந்த அக்டோபர் மாதம் சிஎம்டிஏ விரிவாக்கம் தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டது. விரிவாக்கம் செய்வதற்கான பணிகளை தொடங்குவதற்கு தான் இந்த அரசாணை வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பணிகள் நடைபெற்றது.

இதன்படி 4 நகரங்கள், 12 நகராட்சிகள், 13 பேரூராட்சிகள், ஒரு சிறப்பு நிலை பேரூராட்சி மற்றும் 1125 கிராமங்களை உள்ளடக்கிய 22 பஞ்சாயத்து யூனியன் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் ‘சென்னை பெருநகர் பகுதிகளில் இணைக்க சம்மதம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானங்கள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானங்களின் அடிப்படையில் இந்தப் பகுதிகளை இணைத்து விரிவாக்கம் செய்வதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்கும். இதன்பிறகு இது அமலுக்கு வரும்” என்று அவர்கள் கூறினர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMicWh0dHBzOi8vd3d3LmhpbmR1dGFtaWwuaW4vbmV3cy90YW1pbG5hZHUvOTM1Mjg5LXdoZW4td2lsbC10aGUtY2hlbm5haS1tZXRyb3BvbGl0YW4tZXhwYW5zaW9uLWNvbWUtaW50by1mb3JjZS5odG1s0gEA?oc=5