சென்னை: பழைய கட்டடத்தை இடிக்கும்போது விபரீதம் – சாலையில் சென்றவர்கள்மீது விழுந்து விபத்து – Vikatan

சென்னைச் செய்திகள்

சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் பழைய கட்டடத்தை இடிக்கும் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் பெண்கள் உள்ளிட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் சேதமடைந்த பழைய கட்டடம் ஒன்றை இடிக்கும் பணி, தனியார் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டுவந்தது. கட்டடத்தை இடிக்கும்போது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கட்டடத்தை இடிக்கும்போது எதிர்பாராதவிதமாக சாலையில் சென்றுகொண்டிருந்தவர்கள்மீது சுவர் விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது.

பழைய கட்டடத்தை இடிக்கும்போது விபத்து

இதில் ஒருவர் படுகாயமடைந்திருக்கிறார். மேலும் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கிடையே படுகாயமடைந்த பெண் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மீட்புப்படையினர், இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். மீட்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் ஆயிரம் விளக்குப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்து காரணமாக அண்ணா சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. போக்குவரத்தைச் சீர்செய்யும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiZWh0dHBzOi8vd3d3LnZpa2F0YW4uY29tL25ld3MvYWNjaWRlbnQvYW4tYWNjaWRlbnQtZHVyaW5nLXRoZS1kZW1vbGl0aW9uLW9mLWFuLW9sZC1idWlsZGluZy1pbi1jaGVubmFp0gFvaHR0cHM6Ly93d3cudmlrYXRhbi5jb20vYW1wL3N0b3J5L25ld3MvYWNjaWRlbnQvYW4tYWNjaWRlbnQtZHVyaW5nLXRoZS1kZW1vbGl0aW9uLW9mLWFuLW9sZC1idWlsZGluZy1pbi1jaGVubmFp?oc=5