கடுமையான குளிர், பயணிகள் எண்ணிக்கை குறைவால் சென்னையில் 6 விமானங்கள் ரத்து – தினகரன்

சென்னைச் செய்திகள்

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் கடுங்குளிர், பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது காரணமாக 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை விமான நிலைய சுற்றுவட்டார பகுதிகளில் கடுங்குளிர் நிலவி வருகிறது. இதனால் சென்னையில் இருந்து நேற்றிரவு 9 மணிக்கு ஐதராபாத் செல்லும் இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மற்றும் இரவு 10 மணிக்கு கொல்கத்தா செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானமும் திடீரென ரத்து செய்யப்பட்டன. இதேபோல் ஐதராபாத் மற்றும் கொல்கத்தாவில் இருந்து இன்று அதிகாலை 1.15 மணிக்கு சென்னை வரவேண்டிய 2 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

மேலும் இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து இன்று அதிகாலை 2 மணியளவில் சென்னை வந்து விட்டு, மீண்டும் அதிகாலை 3.15 மணியளவில் கொழும்புக்கு திரும்பும் 2 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. நேற்றிரவு முதல் இன்று காலை வரை ஒரே நாளில் சென்னை விமான நிலையத்தில் கடுங்குளிர் மற்றும் போதிய பயணிகள் இல்லாத காரணத்தினால் புறப்பாடு, வருகையில் 6 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டன.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் விசாரித்தபோது, இரவு நேர கடுமையான குளிர் மற்றும் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. அதனால் புறப்பாடு, வருகையில் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது பெரிய ரக விமானங்கள். அதற்கு தகுந்த பயணிகள் எண்ணிக்கை இல்லாமல், மிகவும் குறைவாக இருக்கும் சூழ்நிலையில், விமானங்களை காலியாக இயக்க முடியாது. எனவே ரத்து செய்யப்படுகிறது. அதே நேரத்தில் அந்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன’ என்றனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MzQwODPSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgzNDA4My9hbXA?oc=5