சென்னை எத்திராஜ் கல்லூரியில் தமிழர் பெருமையை போற்றும் ‘மண்ணும் மரபும்’ கண்காட்சி … – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: தமிழர் பெருமைகளைப் போற்றும் ‘மண்ணும் மரபும்’ கண்காட்சி சென்னை எத்திராஜ் கல்லூரியில் கோலாகலமாகத் தொடங்கியது. காந்தி உலக மையம் என்ற சமூகநல அமைப்பு சார்பில், தமிழர் பாரம்பரியத்தை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லவும், கிராமப்புற பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் ‘மண்ணும் மரபும்’ என்ற கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

நடப்பாண்டுக்கான ‘மண்ணும் மரபும்’ கண்காட்சி சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி வளாகத்தில் நேற்று தொடங்கியது. தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட எத்திராஜ் கல்லூரித் தலைவர் வி.எம்.முரளிதரன் பேசியதாவது:

நமது முன்னோர்கள் மிகச் சிறந்த வாழ்க்கை முறை, பாரம்பரியங்களைப் பின்பற்றி, இயற்கையுடன் இணைந்து வாழ்ந்துள்ளனர். அந்தமரபையும், நம் மண்ணையும் போற்றிப் பாதுகாப்பது கடமையாகும்.

இன்றைய தலைமுறையினரிடம் நமது பெருமைகளை எடுத்துக்கூற இந்த நிகழ்ச்சி சிறந்த முன்னெடுப்பாகும். மருத்துவம், கலைகள், விளையாட்டுகளில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கியுள்ளனர். கரோனா தொற்றில் நாம் தவித்தபோது, கபசுரக் குடிநீர் பெரிதும் உதவியாக இருந்தது.

காந்தி உலக மையம் சார்பில் தமிழர் பெருமைகளை போற்றும் ‘மண்ணும் மரபும்’ கண்காட்சி சென்னை எத்திராஜ் கல்லூரியில் நேற்று தொடங்கியது. இக்கண்காட்சியை எஃப்.டபிள்யு.சி. மையத்தின் நிறுவனர் சி.கே.அசோக்குமார், எத்திராஜ் கல்லூரி தலைவர் வி.எம்.முரளிதரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். உடன், காந்தி உலக மையத்தின் நிறுவனர் எம்.எல்.ராஜேஷ், தலைவர் எம்.மோகன்ராஜ், துணைத் தலைவர் எஸ்.அனந்தநாராயணன் உள்ளிட்டோர்.

மரபு சார்ந்த நவீன உலகை நாம் உருவாக்க வேண்டும். அதற்கு பழங்கால மருத்துவம் உட்பட, பாரம்பரியமிக்க சிறப்புகளை முறையாக ஆவணப்படுத்துவது அவசியமாகும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில், எஃப்.டபிள்யு.சி.மைய நிறுவனர் சி.கே.அசோக்குமார், காந்தி உலக மைய நிறுவனர் எம்.எல்.ராஜேஷ், தலைவர் எம்.மோகன்ராஜ், துணைத் தலைவர் எஸ்.அனந்தநாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சி நாளை (ஜன. 29) வரை, தினமும் காலை 9.30 முதல் இரவு 8.30 மணி வரை நடைபெற உள்ளது.

ரேக்ளா வண்டியை ஓட்டிப் பார்க்கும் மாணவிகள்.

நாட்டுப்புற கலைகள்

இதில், அரிய வகை மூலிகைக் கண்காட்சி, வேளாண் பொருட்களுக்கான நேரடிச் சந்தை, சித்த மருத்துவ முகாம், நெல் மற்றும் மரபு விதைகளை காட்சிப்படுத்தல், பாரம்பரிய உணவு வகை, மண்பாண்டம் தயாரிப்பு, பழமையான இசை, போர்க் கருவிகள் காட்சி, பாரம்பரிய விளையாட்டுகள், பனைப் பொருட்கள் காட்சியகம் என 100-க்கும்மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், அழிந்து வரும்நாட்டு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் அணிவகுப்பு, சிறப்பு பட்டிமன்றம், நிழல்பாவைக் கூத்து,ஒயிலாட்டம் போன்ற நாட்டுப்புறகலைகளும் நடைபெற உள்ளன.

இந்த நிகழ்ச்சி விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் நலிந்த கலைஞர்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பதுடன், நமதுதமிழர் பாரம்பரியத்தை மீட்டெடுக்கவும் உந்துதலாக அமையும் என்று காந்தி உலக மைய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiUWh0dHBzOi8vd3d3LmhpbmR1dGFtaWwuaW4vbmV3cy90YW1pbG5hZHUvOTM1MTUyLXNvaWwtYW5kLWhlcml0YWdlLWV4aGliaXRpb24uaHRtbNIBAA?oc=5