சிங்காரச் சென்னையைச் சீரழிக்கும் போஸ்டர்கள்… முதல்வரின் கனவுத் திட்டம் என்னவாகும்? – Vikatan

சென்னைச் செய்திகள்

தி.மு.க 2021-ல் ஆட்சி அமைத்த பின்னர், முதல்வர் ஸ்டாலினின் கனவுத் திட்டமான ‘சிங்காரச் சென்னை’ மீண்டும் உயிரூட்டம் பெற்றது. அதற்காக, “சிங்காரச் சென்னை 2.0” என்கிற செயல் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. ‘தூய்மையான எழில்மிகு சென்னை’ என்பது இந்தத் திட்டத்தின் குறிக்கோளாகப் பறைசாற்றப்பட்டுவரும் நிலையில், அந்தக் குறிக்கோளையே நீர்த்துப்போகச் செய்யும் வகையில் சென்னையில் போஸ்டர் கலாசாரம் மேலோங்கியிருக்கிறது. ‘‘மேம்பாலங்களில் தொடங்கி கழிப்பறைகள் வரை ஒன்றுவிடாமல் போஸ்டர்கள் ஒட்டப்படுவதால், சிங்காரச் சென்னை திட்டமே சொதப்பலாகிவிட்டது” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்!

சமீபத்தில், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்துக்காக திருவள்ளூருக்குச் சென்றார் முதல்வர் ஸ்டாலின். அவரை வரவேற்று மதுரவாயலிலிருந்து திருவள்ளூர் வரை போஸ்டர்களும் பேனர்களும் முளைத்திருந்தன. சமீபத்தில் ஆளுநரைக் கண்டித்தும் இதேபோல நகரெங்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இப்படி ஒட்டப்படும் போஸ்டர்கள், வைக்கப்படும் பேனர்களுக்கு முறையான அனுமதியும் பெறப்படுவதில்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய வழக்கறிஞர் பன்னீர் செல்வம், ‘‘கட்சியோ, தனிநபரோ போஸ்டர் ஒட்ட வேண்டுமென்றால் மாநகராட்சியிடம் முன் அனுமதி பெற்று அதைக் காவல்துறையின் அனுமதிக்காகக் கொடுக்க வேண்டும். அனுமதி கிடைத்த பின்னரே போஸ்டர் ஒட்ட முடியும். ஆனால், இந்த நடைமுறையே இப்போது கைவிடப்பட்டிருக்கிறது. `பொது இடங்களில் ஃபிளெக்ஸ், பேனர் வைக்கக் கூடாது’ என்று நீதிமன்றங்கள் உத்தரவிட்டும் அதை யாரும் கண்டுகொள்வதில்லை. ஆட்சியிலிருக்கும் கட்சியே தங்களது கட்சி போஸ்டர்களை நகரெங்கும் ஒட்டுகிறார்கள். சிங்காரச் சென்னை, ஸ்மார்ட் சிட்டி கோவை போன்ற திட்டங்களை முன்னெடுக்கும் அரசு, முதலில் இது போன்ற போஸ்டர் கலாசாரங்களை நிறுத்த வேண்டும்” என்றார்.

நம்மிடம் பேசிய அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், ‘‘அத்துமீறி போஸ்டர் ஒட்டினால் அபராதம் விதிக்கும் சட்டம் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிறது. ஆனால், அது கிடப்பில் போடப்பட்டுவிட்டது. அதிகாரிகள் கட்சிப் பாகுபாடு இல்லாமல் போஸ்டர் ஒட்டுவோர்மீது அபராதம் வசூலிக்க வேண்டும். போஸ்டர் ஒட்டுவது எந்தக் கட்சியாக இருந்தாலும் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். சமீபகாலமாக போஸ்டர் ஒட்டுவதில் ஆளுங்கட்சிதான் தீவிரமாக இருக்கிறது. அதிகார மையத்தில் இருப்பவர்கள் சட்டத்தைச் சரியாகப் பின்பற்றினாலே போதும், மற்றவர்கள் சரியாக நடந்துகொள்வார்கள்” என்றார்.

சமீபத்தில் வெளியான ‘துணிவு’, ‘வாரிசு’ படங்களின் போஸ்டர்களை ஒட்டுவதில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல நகரங்களில் விஜய், அஜித் ரசிகர்கள் இடையே ஒரு யுத்தமே நடந்தது. போஸ்டர்களில் பிரச்னையை உண்டாக்கும் வாக்கியங்கள் இடம்பெற்று, அது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி ரசிகர்களுக்கிடையே மோதல் போக்கை ஏற்படுத்தியது. சென்னையை அழகாக்கும் திட்டத்தை 2006-ல் தி.மு.க ஆட்சிக்கு வந்தபோதே முன்னெடுத்தவர் ஸ்டாலின். கூவம் ஆற்றைச் சுத்தப்படுத்துவதற்கும், உள்ளாட்சித்துறை அமைச்சராக அவர் இருந்தபோது திட்டங்களை முன்னெடுத்தார். அதிகரிக்கும் போஸ்டர் கலாசாரத்தால், அவரது கனவுத் திட்டம் கேள்விக்குறியாகிவருகிறது.

இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் விளக்கம் கேட்டோம். ‘‘கடந்த ஒரு வருடமாக போஸ்டர் ஒட்டுவதைத் தடுக்கத் தீவிர நடவடிக்கை எடுத்திருக்கிறோம். தற்போது போஸ்டர்கள் ஒட்டுவது குறைந்திருக்கிறது. தெருக்களில் போஸ்டர் ஒட்டினால் 200 ரூபாயும், பெயர்ப் பலகைகளில் ஒட்டினால் 500 ரூபாயும் அபராதம் விதிக்கப்படுகிறது. கடந்த 2022-ம் ஆண்டு மட்டும் ரூ.16.5 லட்சம் அபராதமாக வசூலித்திருக்கிறோம். இதுபோக, பொதுச்சொத்துகளில் போஸ்டர் ஒட்டுவோர் மீதும் போலீஸில் புகார் அளித்திருக்கிறோம். நம்முடைய நகரத்தை அழகானதாக, சுத்தமானதாக ஆக்குவதற்கு அனைவரின் உதவியும் மாநகராட்சிக்குத் தேவை. பொது இடங்களில் போஸ்டர் ஒட்டுவதைத் தடுக்க, சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தவிருக்கிறோம். சென்னையை அழகாக்குவதில் பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் மாநகராட்சி வெற்றிபெற முடியாது” என்றார்.

கனவுத் திட்டம் சிதையாமல் பாதுகாப்பாரா முதல்வர்?

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiQmh0dHBzOi8vd3d3LnZpa2F0YW4uY29tL25ld3MvZ2VuZXJhbC1uZXdzL3Bvc3RlcnMtaXNzdWUtaW4tY2hlbm5hadIBAA?oc=5