சென்னையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கான பாராட்டு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில், வடகிழக்கு பருவமழை காலத்தில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு முதல்வர் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார். மழை, வெள்ள காலத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக சென்னை மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

வெள்ளத்தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கான பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
இனி வரும் காலங்களில் மழை நீர் தேக்கம் இல்லாத பருவமழை காலங்களை சென்னை மக்கள் பார்க்க உள்ளனர். அதற்கு இந்த அரசு மேலும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மக்களின் மகிழ்ச்சியே நம்முடைய இலக்கு, அந்த இலக்கை நோக்கியே நாம் செயல்பட்டு வருகிறோம்.

கடந்த முறை தண்ணீர் தங்கிய இடங்களில் இந்த முறை தண்ணீர் தேங்கவில்லை. எங்கும் மழை நீர் தேங்கவில்லை என்ற செய்தி கேட்டு பெரும் மகிழ்ச்சியடைந்தேன். என்ன மழை பெய்தாலும் தண்ணீர் தேங்கவில்லை என்ற சூழலை உருவாக்கி மிகப்பெரிய சாதனை படைத்தோம்.

நம்பர் 1 முதலமைச்சர், நம்பர் 1 தமிழ்நாடு ஆகிய உயர்வும் பாராட்டும் கிடைத்துள்ளது. நாங்கள் பாராட்டு மழையில் நனைய காரணம் சென்னை மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்களும் தான். இதனை ஊருக்கு உணர்த்தவே இந்த பாராட்டு விழா வெளிப்படையாக நடைபெறுகிறது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாடு 2 முக்கிய சாதனைகளை படைத்துள்ளது. அவை கொரோனாவை கட்டுப்படுத்தியது, மழை வெள்ளத்தில் இருந்து மக்களை காத்தது. மேயராக இருந்ததால் சென்னையில் ஒவ்வொரு வார்டும் எனக்கு தெரியும், ஒவ்வொரு தெருவும் எனக்கு தெரியும்.

ஒரு நிகழ்வு நடத்த உடனேயே அங்கே செல்ல வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே ஆறுதல் கூற வேண்டும் என்ற உணர்வு ஏற்பட காரணம் கலைஞர் தான். துப்புரவு பணியாளர் என்ற பெயரை தூய்மை பணியாளர்கள் என மாற்றியது திமுக அரசு தான். மழை நேரங்களில் தூய்மை பணியாளர்களின் பணி மிக மிக மகத்தானது இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MzQ4NDDSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgzNDg0MC9hbXA?oc=5