சென்னை மழை வெள்ள மீட்பு நடவடிக்கைகள்: முதல்வர் ஸ்டாலின் பாராட்டு! – Samayam Tamil

சென்னைச் செய்திகள்
சென்னையில் மழை, வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது இரவு பகல் பாராமல் மாநகராட்சி ஊழியர்கள், அலுவலர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் பணியாற்றினர். அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது.

அந்த நிகழ்வில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

முதல்வர் தனது உரையில், “நம்முடைய அரசு பொறுப்பேற்று 20 மாதங்கள் ஆகியிருக்கிறது. இதில் மிகமிக முக்கியமான இரண்டு சாதனைகளை நாம் படைத்திருக்கிறோம். அந்த இரண்டு சாதனைகளைப் படைத்த காரணத்தால், மக்களிடத்திலே நமக்கு மிகப் பெரிய பாராட்டு கிடைத்திருக்கிறது.
சாகும் வரை பொறுமை காக்கும் சீமான்: ஈவெரா திருமகன் தம்பி ரொம்ப நல்ல தம்பி – ஈரோட்டில் நடந்த கூத்து!
ஒன்று – கொரோனா என்ற கொடிய நோயை எதிர்த்து அதை வென்றோம். அது ஒரு பாராட்டு.
இரண்டாவது – மழை, வெள்ளத்தில் இருந்து மக்களைக் காத்தோம், அது இரண்டாவது பாராட்டு.

கொரோனாவை கட்டுப்படுத்தியதற்குப் பிறகு உடனடியாக ஒரு மிகப்பெரிய மழையை நாம் சந்தித்தோம்.

ஏற்கனவே இருந்த ஆட்சியாளர்கள் அதிலும் குறிப்பாக பத்தாண்டு காலமாக ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் எதுவும் செய்யாமல் இருந்துவிட்ட காரணத்தால், அந்த முதல்முறை மழை எந்த அளவிற்குப் பெய்தது என்பது உங்களுக்குத் தெரியும். அந்த மழையை, அந்த வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதில் நமக்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டன. ஆனால், அந்த நெருக்கடிகளை நாம் ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு வரக்கூடிய காலக்கட்டங்களில் எப்படி நாம் செயல்பட வேண்டும் என்று திட்டமிட்டோம்.

அடுத்த மழை வருவதற்கு முன்னால் அல்லது ஒரு வெள்ளம் ஏற்படுவதற்கு முன்னால், என்ன மழை பெய்தாலும் அந்த மழையின் காரணமாக தண்ணீர் எங்கும் தேங்கவில்லை என்ற ஒரு சூழலை உருவாக்குவதற்காக நாம் உறுதி எடுத்துக் கொண்டோம். உறுதி எடுத்துக்கொண்டது மட்டுமல்ல, அந்த உறுதியை எந்த அளவிற்கு நிறைவேற்றிக் காட்டினோம் என்பது நாட்டிற்கும் தெரியும், உங்களுக்கும் நன்றாகத் தெரியும். அதைத்தான் நான் குறிப்பிட்டுச் சொன்னேன், மிகப் பெரிய இரண்டு சாதனைகளை நாம் செய்து முடித்திருக்கிறோம்.

சமூக வலைத்தளங்களில் – இது கடந்த முறை இங்கு தண்ணீர் தேங்கி இருந்தது என்று அந்தப் படத்தையும் போட்டு, இந்த முறை அந்தப் பகுதியில் தேங்கவில்லை என்ற அந்தப் படத்தையும் போட்டு மக்களிடத்தில் எடுத்துக் காட்டினார்கள். பொதுமக்களும் அதை வாட்ஸ்ஆப்-ல் பகிர்ந்த அந்த செய்திகளையெல்லாம் நாம் தொடர்ந்து பார்த்தோம். நான் அந்த செய்திகளையெல்லாம் பார்த்தபோது, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் இருந்தது. அந்த அளவிற்கு மக்கள் நம்மை மனதாரப் பாராட்டினார்கள். அதேபோல், ஊடகங்களும் பாராட்டின. நேரில் பார்க்கக்கூடிய பொதுமக்களும் நம்மை சந்திக்கிற நேரத்தில் தங்களுடைய பாராட்டுக்களையெல்லாம் வெளிப்படையாக தெரிவித்தார்கள். இப்படிப்பட்டப் பாராட்டு மழையில் நனைவதற்குக் காரணம் யார் என்று கேட்டீர்களென்றால், நீங்கள்தான். அதனால் தான், உங்களைப் பாராட்ட நாங்கள் இங்கே வந்திருக்கிறோம்.

பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், காவல்துறை ஆகிய துறைகளைச் சார்ந்திருக்கக்கூடிய அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் அத்தனைபேரும் பாராட்டுக்குரியவர்களாக இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
பட்ஜெட் 2023 கூட்டத் தொடர் தொடக்கம்: ஒன்றிய அரசை புகழ்ந்து தள்ளிய குடியரசுத் தலைவர்
இவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து பணியாற்றியிருக்கக்கூடிய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களையும் நான் மனதார பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். நான் அடிக்கடி அவரைப் பற்றிச் சொல்கிறபோது, நேருவுக்கு நிகர் நேருதான் என்று நான் அடிக்கடி குறிப்பிட்டுச் சொல்வதுண்டு. கட்சி நிகழ்ச்சிகளில், பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் நான் பேசியதுண்டு. அவர் எப்போதுமே நான்கு கால் பாய்ச்சல்தான் பாய்வார். அந்த அளவிற்கு வேலைகளை சுறுசுறுப்பாக முடுக்கி விடுவார். அவரிடத்தில் ஒரு குணாதிசயம் உண்டு, அன்பும் இருக்கும், கோபமும் இருக்கும். இரண்டு அஸ்திரங்களையும் அவர் ஏவி அந்தக் காரியங்களை நிறைவேற்றுவதில் ஒரு சிறப்புக்குரியவராக விளங்கிக் கொண்டிருக்கிறார்.

அதேபோல் சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அமைச்சர்களான மாண்புமிகு திரு. மா.சுப்பிரமணியன் அவர்களும், மாண்புமிகு திரு. சேகர் பாபு அவர்களும் இரவு பகல் பார்க்காமல் அவர்கள் எந்த அளவிற்கு பணியாற்றினார்கள் என்பதை நீங்களெல்லாம் நன்கு அறிவீர்கள்.

அதேபோல் சென்னை மாநகரத்தின் மேயராகப் பொறுப்பேற்று இன்றைக்கு சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய நம்முடைய சகோதரி மேயர் பிரியா அவர்களும், துணை மேயர் மகேஷ்குமார் அவர்களும் 24 மணிநேரமும் இந்த மாநகருக்குள் சுற்றிச்சுழன்று பணிகளையெல்லாம் எந்த அளவிற்கு முடுக்கிவிட்டார்கள் என்பதை நேரடியாக நாமும் பார்த்தோம்.

அதேபோல் சென்னை மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றிருக்கக்கூடிய திரு. ககன் தீப் சிங் பேடி அவர்கள் ஆற்றிய பணி என்பது மிகமிக மகத்தானது ஒன்று. அனைத்துத் துறைகளையும் மிக சாமர்த்தியமாக ஒருங்கிணைத்து செயலாற்றி அதிலே வெற்றியும் கண்டிருக்கிறார் நம்முடைய ஆணையர் அவர்கள்.

அதேபோலவே, ஐந்து விரலும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் அது ஒரு கையின் பலத்தை நாம் தெரிந்துகொள்ள முடியும். அப்படித்தான், தண்ணீர் நின்றால் – ஒரு மணி நேரத்தில் மோட்டார் வைத்து அதை அகற்றியது மாநகராட்சி!

நீர் நிலைகளைத் தூர் வாரி வைத்திருந்தது நம்முடைய நீர்வளத்துறை! சாலைகளை உடனடியாக சரி செய்து கொடுத்தது நெடுஞ்சாலைத் துறை! சீரான மின்சாரத்தை வழங்கியது மின்சாரத் துறை! பொதுமக்களுக்கு எந்தவித இடைஞ்சலும் இல்லாமல் பார்த்துக் கொண்டது நம்முடைய காவல்துறை!

இதைத்தான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி என்று நாம் சொல்கிறோம். எல்லார்க்கும் எல்லாம் சொல்கிறோம் அல்லவா அது தான் திராவிட மாடல் ஆட்சி. எல்லோரும் சேர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்ட காரணத்தால்தான் இந்த வெற்றியை நம்மால் பெற முடிந்திருக்கிறது.

மழை வெள்ளக் காலத்தில் மக்களிடத்தில் நல்ல பெயர் எடுப்பது மிகமிக சிரமம். அதில் எனக்கு நிறைய அனுபவம் உண்டு. காரணம், நானும் இந்த மாநகராட்சியின் மேயராக இருந்தவன், ஒரு முறையல்ல, இரண்டு முறை, கிட்டத்தட்ட ஏழாண்டு காலம் இருந்தவன். சென்னையில் இருக்கக்கூடிய ஒவ்வொரு வார்டும் எனக்குத் தெரியும், ஏன் ஒவ்வொரு தெருவும் எனக்குத் தெரியும்.

மழை நின்ற பிறகு மட்டுமல்ல, மழை பெய்துகொண்டு இருக்கும்போதே ரெயின்கோட் போட்டுக் கொண்டு, நம்முடைய கமிஷனரை, நம்முடைய அலுவலரை அழைத்துக்கொண்டு, அந்தப் பணிகளையெல்லாம் நேரடியாக பார்த்தவன் நான். இப்போதும் அப்படித்தான். எனக்கு முன்னால் அதிகாரிகளும் – அலுவலர்களும் – தூய்மைப் பணியாளர்களும் இருப்பார்கள். நான் மட்டுமல்ல, அவர்களும் மழையில் நனைந்தபடியே பணியாற்றியவர்கள் தான்.

இதுதான் மக்கள் பணி. சுருக்கமாக ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால், இதுதான் கலைஞருடைய பணி, கலைஞருடைய பாணி. ஒரு சம்பவம் நடந்தவுடனே, அந்த இடத்திற்குப் போய்விட வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களைச் சென்று பார்க்க வேண்டும், அவர்களுக்கு நாம் ஆறுதல் சொல்ல வேண்டும் என்று என் மனம் துடிக்கிறது என்றால், அதற்குக் காரணம் தலைவர் கலைஞர் ஊட்டிய அந்த உணர்வுதான். அப்படி மக்களோடு மக்களாக நின்று கடமையாற்றிய உங்கள் அனைவரையும் இந்த நேரத்தில் நான் மனதாரப் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.
ஜெயலலிதா சொத்தில் பங்கு வேண்டும்: கர்நாடகாவிலிருந்து கிளம்பி வந்த முதியவர்!
அரசாங்கத்தில் வேலை பார்க்கிறோம் – சம்பளம் வருகிறது என்று இல்லாமல், மக்களுக்காக பணியாற்றுகிறோம் என்கிற அந்த சேவை மனப்பான்மை உள்ளத்தோடு இருக்கக்கூடிய நிலையில் நீங்கள் பணியாற்றிய காரணத்தில்தான் இந்தப் பாராட்டும், இந்தப் பெருமையும், இந்தப் புகழும் இன்றைக்கு இந்த அரசாங்கத்திற்கு, இந்த மாநகராட்சிக்கு, நமக்கெல்லாம் வந்து சேர்ந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக, தூய்மைப் பணியாளர்களின் பணி என்பது மிகமிக மகத்தான ஒன்று என்பதை நான் இங்கே பெருமையோடு குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.

துப்புரவுப் பணியாளர்கள் என்ற அந்த சொல்லையே மாற்றியது தலைவர் கலைஞர் அவர்கள்தான். தூய்மைப் பணியாளர் என்று மாற்றியது தலைவர் கலைஞர் அவர்கள்தான். அந்தப் பணியின் கடினமான தன்மையை ஏற்றுக்கொண்டிருக்கக்கூடிய நீங்கள் சிறப்பாக பணியாற்றியிருக்கிறீர்கள். அதனால்தான் இந்த முகமலர்ச்சியோடு நம்முடைய அரசாங்கத்தை மக்கள் பார்க்கிறார்கள்.

2021-ஆம் ஆண்டு நமது அரசு பொறுப்பேற்றதும் பருவமழையின் போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளையும் பல முறை முதலமைச்சர் என்ற முறையில் நேரடியாக பார்வையிட்டு, ஆய்வு செய்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி, அந்த இடங்களில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினேன்.

அதேபோல, அமைச்சர் அவர்களும் எந்த அளவிற்கு பணியாற்றினார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இதையெல்லாம் பார்த்த காரணத்தினால், இனி வரக்கூடிய காலக்கட்டங்களில் மழை வெள்ளப் பாதிப்பிலிருந்து சென்னை மாநகருக்கு நிரந்தரத் தீர்வினை உருவாக்க வேண்டும் என்று ஒரு முடிவு எடுத்தோம். அப்படி முடிவெடுத்த காரணத்தினால்தான் ஒரு ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் அவர்கள் தலைமையில் ஒரு வல்லுநர் குழுவை நாம் நியமித்து, ஒரு மேலாண்மைக்குழுவாக அதை உருவாக்கி, அந்தக் குழு சென்னையில் பாதிக்கப்பட்ட அந்தப் பகுதிகளை எல்லாம் பார்வையிட்டு, வெள்ளம் பாதித்த இடங்களையெல்லாம் ஆய்வு செய்து, அந்தப் பகுதிகளில் இருக்கக்கூடிய மக்களிடத்திலும் ஆய்வு செய்து, அதற்கு பிறகு அவர்கள் அறிக்கையை கிட்டத்தட்ட மூன்று கட்டங்களாக நம்முடைய அரசிடம் வழங்கினார்கள்.

ஆக, இந்தக் குழுவின் ஆலோசனைப்படி, நம்முடைய மாநகரில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் அமைக்க பல்வேறு திட்டங்களை நாம் உருவாக்கினோம், அதற்காக நிதி ஒதுக்கீடு செய்தோம். பருவமழை துவங்குவதற்கு முன்பே இந்தப் பணிகளை முடிக்க உத்தரவு வழங்கினோம்.

அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், 254 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 57 கிலோ மீட்டர் நீளத்திற்கும்; வெள்ள நிவாரண நிதியின் கீழ், 291 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 107.57 கிலோ மீட்டர் நீளத்திற்கும்; உட்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் நிதியின் கீழ், 26 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 10 கீலோ மீட்டர் நீளத்திற்கும்; மூலதன நிதியின் கீழ், 7 கோடியே 41 லட்சம் மதிப்பீட்டில், 1 கீலோ மீட்டர் நீளத்திற்கும் மாநகரின் பிரதான பகுதிகளில் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றது.

ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியோடு கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதிகளில் 3 ஆயிரத்து 220 கோடி ரூபாய் மதிப்பில், 769 கிலோ மீட்டர் நீளத்திற்கும்; ஜெர்மன் பன்னாட்டு வங்கி நிதி உதவியின்கீழ் கோவளம் வடிநிலம் பகுதிகளில் ஆயிரத்து 714 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 360 கீலோ மீட்டர் நீளத்திற்கும்; உலக வங்கி நிதி உதவியோடு விடுபட்ட இடங்களில் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 44.88 கிலோ மீட்டர் நீளத்திற்கும், புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கக்கூடிய பணிகள் நடைபெற்று வருகின்றது.

2021-ஆம் ஆண்டு பருவமழையின்போது பெற்ற அனுபவத்தைக் கொண்டு, உடனடியாக நாம் எல்லா வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் குறுகிய காலத்தில் செய்து முடித்தோம். அதன் பயனை 2022-ஆம் ஆண்டு பருவமழையின்போது கண்கூடாகப் பார்த்தோம். இனிவரும் ஆண்டுகளில், மழைநீர் தேக்கம் இல்லாத பருவமழைக் காலங்களை சென்னை வாழ் மக்கள் நிச்சயமாக பார்க்க இருக்கிறார்கள். இந்த அரசு மேலும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்பதை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் மகிழ்ச்சியே நமது இலக்கு. அந்த இலக்கை நோக்கியே நாம் செயல்பட்டு வருகிறோம்.

நான் பலமுறை சொன்னதுண்டு. நம்பர் ஒன் முதலமைச்சர் – நம்பர் ஒன் தமிழ்நாடு – ஆகிய உயர்வும் பாராட்டும் என்பது ஒரு பக்கம் என்று சொன்னால், அந்த பாராட்டு தனிப்பட்ட ஸ்டாலினுக்கு கிடைத்த பாராட்டாக நான் கருதவில்லை. ஒரு நாளும் அப்படி நினைக்கமாட்டேன். உங்களுடைய ஒவ்வொருடைய உழைப்பால்தான் அந்த பாராட்டும், அந்த பெருமையும் நமக்கு கிடைத்திருக்கிறது. அதை ஊருக்கு உணர்த்துவதற்காகத்தான் இந்தப் பாராட்டு விழாவை இன்றைக்கு நாம் வெளிப்படையாக நடத்திக் கொண்டிருக்கிறோம்.

இப்படி பாராட்டும் உள்ளம் அனைவருக்கும் வந்தாக வேண்டும். பாராட்டுவதை வெளிப்படையாகப் பாராட்ட வேண்டும். வெளிப்படையாக பாராட்டினால்தான், அறிவுறுத்தவும், கேள்வி கேட்கவும் நாம் உரிமை பெற்றிடமுடியும்.

அந்த வகையில், பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், காவல்துறை ஆகிய துறைகளின் அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகிய அனைவரையும் நான் இந்த நேரத்தில் மனதார பாராட்டுகிறேன்.

திரு. நேரு அவர்கள் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறார் என்றால் பிரமாண்டமாக இருக்கும். ஏன் இதை சொல்கிறேன் என்று சொன்னால், அறுசுவை உணவு எப்போதும் இருக்கும் அவருடைய நிகழ்ச்சியை பொறுத்தவரைக்கும். அந்த வகையில் அனைவரும் உணவு உண்டு, நிறைவோடு செல்லுமாறு சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் உரிமையோடு நான் உங்களை எல்லாம் கேட்டுக் கொள்கிறேன். உங்களுடன் சேர்ந்து, உங்களில் ஒருவனாக நானும் உங்களோடு இந்த பந்தியில் அமர்ந்து உணவருந்தி செல்ல இருக்கிறேன் என்பதை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, மீண்டும் அத்தனை பேருக்கும், என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன்” என்றார்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMimwFodHRwczovL3RhbWlsLnNhbWF5YW0uY29tL2xhdGVzdC1uZXdzL3N0YXRlLW5ld3MvY20tbWstc3RhbGluLWhvbm9yZWQtdGhvc2Utd2hvLXdvcmtlZC13ZWxsLWR1cmluZy10aGUtcmFpbnMtYW5kLWZsb29kcy1pbi1jaGVubmFpL2FydGljbGVzaG93Lzk3NDg2MjYwLmNtc9IBnwFodHRwczovL3RhbWlsLnNhbWF5YW0uY29tL2xhdGVzdC1uZXdzL3N0YXRlLW5ld3MvY20tbWstc3RhbGluLWhvbm9yZWQtdGhvc2Utd2hvLXdvcmtlZC13ZWxsLWR1cmluZy10aGUtcmFpbnMtYW5kLWZsb29kcy1pbi1jaGVubmFpL2FtcF9hcnRpY2xlc2hvdy85NzQ4NjI2MC5jbXM?oc=5