சென்னை ஐஐடியில் இன்று ஜி-20 கல்வி மாநாடு தொடக்கம்: வெளிநாடுகளின் பிரதிநிதிகளுக்கு … – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை ஐஐடி-ல் இன்று ஜி-20 கல்வி மாநாடு தொடங்குகிறது. இதில் பங்கேற்க வந்துள்ள பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் சென்னை, தஞ்சை உள்ளிட்ட இடங்களில் ஜி-20 மாநாட்டுக் கருத்தரங்கம், கண்காட்சி உள்ளிட்டவை நடைபெற உள்ளன. மேலும், மாநாட்டில் பங்கேற்க வரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள், மாமல்லபுர சிற்பங்களை நாளை(பிப். 1) பார்வையிட ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன. இதையொட்டி, மாமல்லபுரத்தில் நாளை சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடி-ல் ஜி-20 கல்வி மாநாடு இன்று தொடங்குகிறது. இதையொட்டி, ஐஐடி ஆராய்ச்சி மைய வளாகத்தில், 3, 6, 7-ம் தளங்களில் கல்விக் கருத்தரங்கம், கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பங்கேற்பதற்காக நேற்றுகாலை முதலே ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் சென்னை வரத்தொடங்கினர். அவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அவர்கள் தங்கும் விடுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

சென்னை ஐஐடி வளாகத்தில் ‘கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு’ என்ற தலைப்பில் இன்று நடைபெறும் ஜி-20 பிரதிநிதிகள் மாநாட்டின் தொடக்க நிகழ்வில், டிஜிட்டல் தொழில்நுட்பம் குறித்து ஐஐடி இயக்குநர் வி.காமகோடி உரையாற்றுகிறார்.

மூன்று அமர்வுகளில் உயர்தர படிப்புகள் தொடர்பான ஆய்வுகள், தொழில்நுட்பப் பயன்பாடுகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. முதல் அமர்வில், யுனிசெப், ஆஸ்திரேலியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் பிரதிநிதிகள், இரண்டாம் அமர்வில் மொரீஷியஸ், துருக்கி, இங்கிலாந்து, இந்தியப் பிரதிநிதிகள், 3-ம் அமர்வில் தென்னாப்ரிக்கா, நெதர்லாந்து, சிங்கப்பூர், வங்கதேசம் மற்றும் பிரான்ஸ் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். கருத்தரங்க முடிவில், ஐஐடி வளாகத்தை வெளிநாட்டுப் பிரதிநிதிகள் சுற்றிப் பார்க்கின்றனர். மேலும், ஐஐடி வளாகத்தில் உள்ள முக்கிய மையங்களையும் அவர்கள் பார்வையிடுகின்றனர்.

இந்தக் கருத்தரங்கில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 200 மாணவர்கள் பங்கேற்கின்றனர். மேலும், சென்னை ஐஐடி-யில் பயிலும் 100 மாணவர்களுக்கும் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. உரிய அடையாள அட்டைஉள்ளவர்கள் மட்டுமே நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட உள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMigwFodHRwczovL3d3dy5oaW5kdXRhbWlsLmluL25ld3MvZWR1Y2F0aW9uLzkzNjczNC1nLTIwLWVkdWNhdGlvbi1zdW1taXQta2lja3Mtb2ZmLWF0LWlpdC1jaGVubmFpLXRvZGF5LWZvcmVpZ24tZGVsZWdhdGVzLXdlbGNvbWUuaHRtbNIBAA?oc=5