சிறுபான்மையினருக்கு எதிராக பேசிய வழக்கறிஞர் விக்டோரியா கவுரியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க எதி… – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக மத்திய அரசு வழக்கறிஞர் விக்டோரியா கவுரியை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் சார்பில் குடியரசுத் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதிகளாக நியமிக்க எட்டு பேரின் பெயர்களை உச்ச நீதிமன்ற கொலிஜியம், மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருந்தது. இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மத்திய அரசு வழக்கறிஞராக உள்ள விக்டோரியா கவுரியை, உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் வைகை, என்.ஜி.ஆர் பிரசாத், சுதா ராமலிங்கம் உள்ளிட்ட 21 பேர் குடியரசு தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற கொலீஜியத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

அந்த கடிதத்தில் நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு எதிராக விக்டோரியா கவுரி பல்வேறு வெறுப்பு கருத்துக்களை தெரிவித்துள்ளதாகவும் அந்த பேச்சுகள் இன்னும்  யூடியூப்-பில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். ஒரு பேட்டியில் இந்தியாவில் கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்களை விட அபாயகரமானவர்கள் என்றும் மற்றொரு பேட்டியில் கிறிஸ்துவ பாடல்களுக்கு பரத நாட்டியன் ஆட கூடாது என அவர் பேசியுள்ளதை சுட்டிக்காட்டி உள்ளனர்.

பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியின் தேசிய பொதுச்செயலாளராக  பொறுப்பு வகிக்கும் விக்டோரிய கவுரி,  அந்த கட்சிக்கும், அதன் கொள்கைக்கும்  விசுவாசமாக இருப்பதாகவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பேசிய விக்டோரியா கவுரி நீதிபதியாக நியமிப்பது என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும், அவரை நியமிக்க அனுப்பிய பரிந்துரையை திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் அவர் எவ்வாறு உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டார் என விளக்கம் கேட்க வேண்டும் எனவும் கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMigwFodHRwczovL3RhbWlsLm5ld3MxOC5jb20vbmV3cy90YW1pbC1uYWR1L2xhd3llcnMtdG8td3JpdGUtbGV0dGVyLW9uLXByZXNpZGVudC12aWN0b3JpYS1nb3dyaS1hcy1tYWRyYXMtaGlnaC1jb3VydC1qdWRnZS04ODQwNzkuaHRtbNIBhwFodHRwczovL3RhbWlsLm5ld3MxOC5jb20vYW1wL25ld3MvdGFtaWwtbmFkdS9sYXd5ZXJzLXRvLXdyaXRlLWxldHRlci1vbi1wcmVzaWRlbnQtdmljdG9yaWEtZ293cmktYXMtbWFkcmFzLWhpZ2gtY291cnQtanVkZ2UtODg0MDc5Lmh0bWw?oc=5