ஐ.ஐ.டி வளாகத்தில் 3 ஆண்டுகளில் 338 வன உயிரினங்கள் இறப்பு! – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
ஐஐடி சென்னை

  • Share this:
சென்னை கிண்டியில் 246 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள வனப்பகுதியில்தான் ஐ.ஐ.டி வளாகம் அமைந்துள்ளது. இங்கு புள்ளிமான், வெளிமான், குரங்கு, நரி, நல்லபாம்பு, மரநாய், கீரிப்பிள்ளை உள்ளிட்ட வன உயிரினங்கள் வசிக்கின்றன. இந்த ஐ.ஐ.டி வளாகத்தில் உற்பத்தியாகும் கழிவுகளை முறையாக கையாளாத காரணத்தால் அக்குப்பைகளை வன உயிரினங்கள் உண்டு இறந்த சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவங்களையடுத்து 2017ஆம் ஆண்டு வன உயிரின ஆர்வலர் ஆண்டனி க்ளமெண்ட் ரூபின் என்பவர் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. அதில் குறிப்பாக குப்பைகளை முறையாக கையாள வேண்டும். மான்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் அறிவிப்புப் பலகைகள் வைக்க வேண்டும். சாலையில் வேகத்தடுப்புகள் வைக்க வேண்டும் உள்ளிட்டவையும் அடங்கும். இந்த உத்தரவுகளை சிலவற்றை ஐ.ஐ.டி நிர்வாகம் பின்பற்றினாலும் மான்கள் இறப்பு தொடர்சியாக நிகழ்ந்த வண்ணமே இருந்தது.

மான்கள்

இந்த நிலையில் கடந்த மாதம் ஐ.ஐ.டி நிர்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், வனத்துறை ஆகிய துறைகளில் உள்ள மூன்று நிபுணர்களைக் கொண்ட குழுவை உருவாக்கி அந்த குழுவானது தொடர்ச்சியாக ஐ.ஐ.டி வளாகத்தில் வன உயிரினங்கள் தொடர்பாக மாதாந்திர கூட்டம் நடத்தி கண்காணிக்க வேண்டும் என்று  உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தது பசுமைத் தீர்ப்பாயம்.

இந்த நிலையில் அண்மையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆண்டனி தமிழ்நாடு வனத்துறையிடம் இருந்து பெற்ற தகவலில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஐ.ஐ.டி வளாகத்தில் மொத்தமாக 338 வன உயிரினங்கள் இறந்துள்ளதாகவும், அதில் 265 புள்ளிமான்கள், 1 5 வெளிமான்கள், 58 குரங்குகள்,  3 நரிகள், 2 மரநாய்,  1 நல்லபாம்பு,  3 கீரிப்பிள்ளை  என்றும் தெரிய வந்ததுள்ளது. இந்த எண்ணிக்கையானது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வன உயிரினங்கள் உயிரிழப்பைத் தடுக்க ஐ.ஐ.டி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்த அத்தனை விஷயங்களையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் உள்ளது.

தமிழ்நாடு வனத்துறை சார்பில் ஐ.ஐ.டி வளாகத்தில் விபத்து மற்றும் பிற குற்றங்களால் வன உயிரினங்கள் இறக்க நேரிட்டால் உரிய குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளது.Also see:

[embedded content]


First published: March 14, 2020

Source: https://tamil.news18.com/news/tamil-nadu/forest-animals-died-in-chennai-iit-campus-skd-sat-267479.html