சென்னை வீதிகளில் எதிரொலிக்காத கொரோனா பீதி! – Samayam Tamil

சென்னைச் செய்திகள்
கோப்புப்படம்
சென்னை: உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பீதி சென்னை நகர வீதிகளில் வார விடுமுறை நாட்களில் எதிரொலிக்காத சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகை நடுநடுங்க வைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தற்போது அதிகரித்துள்ளது. இந்தியாவில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 107ஆக உயர்ந்துள்ளது. அதுதவிர கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருவர் உயிரிழந்துள்ளனர். 9 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வரும் மத்திய அரசு, விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது. கைகளை சுத்தமாக கழுவுதல், கூட்ட நெரிசல் உள்ள இடங்களுக்கு செல்லாமல் தவிர்த்தல் என பல்வேறு அறிவுறுத்தல்கள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ்: மாட்டு மூத்திரம் குடிக்க வரிந்து கட்டிய இளைஞர்கள்

இந்தியாவின் பல நகரங்கள் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக முடங்கிப் போயுள்ளது. கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் இதனை நோய் தொற்றாக அறிவித்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக ஹைதராபாத், பெங்களூரு, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு நகர மக்கள், நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லாமல் தவிர்ப்பது குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்கின்றனர்.

ஆனால், சென்னை நகர வீதிகளில் கொரோனா பீதி துளிகூட மக்களிடம் இல்லை. டி.நகர் ரங்கநாதன் தெரு, தியேட்டர்கள், பல்வேறு ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வார விடுமுறை நாட்களில் வழக்கம் போலவே கூட்டம் அதிகமாக இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷாப்பிங் மால்களில் சிலர் முகமுடியுடன் இருந்தாலும், பெரும்பாலானோர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருக்கும் சானிட்டைசர்களை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் அதிக விழிப்புணர்வுடன் இருக்கின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.

TN Schools Holiday: தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை; திரையரங்குகள் மூடல் – தமிழக அரசு உத்தரவு!

நிலைமை கட்டுக்குள் உள்ளது என்பன போன்ற தமிழக அரசின் பெரும்பாலும் ஊக்குவிக்கப்படும் உறுதிமொழிகளாலோ அல்லது அறியாமை, அலட்சியம் காரணமாக மக்களின் வாழ்க்கை இயல்பாக இருப்பதாக தெரிகிறது. ஆனால், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லாமல் தவிர்க்க வேண்டும், ஒருவருக்கொருவர் சுமார் 3 மீட்டர் இடைவெளியுடன் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட மத்திய அரசின் அறிவுறுத்தலை அலட்சியப்படுத்துவது சரியல்ல என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/chennai-streets-show-no-signs-of-covid-19-panic/articleshow/74637804.cms