சென்னை வந்துசெல்ல வேண்டிய 26 விமானங்கள் ரத்து – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னை வந்துசெல்ல வேண்டிய 26 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

ஆலந்தூர்,

சீனாவை தொடர்ந்து உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் பல வெளிநாடுகளில் சுற்றுலா விசா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. விமான பயணங்கள் மூலமாக கொரோனா வைரஸ் பரவக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் நவீன கருவிகள் மூலம் சோதனை செய்யப்பட்ட பின்னரே வெளியே அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

பன்னாட்டு முனையத்தில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் முக கவசங்களை அணிந்தே பணியாற்றுகின்றனர். விமானங்களில் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்ற பீதியால் விமானங்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவில் ஏப்ரல் 14-ந் தேதி வரை வெளிநாட்டு பயணிகளுக்கு விசா வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக பயணிகள் வரத்து குறைவால் குவைத்தில் இருந்து வரவேண்டிய 3 விமானங்கள், இலங்கையில் இருந்து வரவேண்டிய 3 விமானங்கள், மஸ்கட், ஜெர்மனி, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தோகா, ஹாங்காங் ஆகிய நகரங்களில் இருந்து வரவேண்டிய 7 விமானங்கள் என சென்னை வரவேண்டிய 13 விமானங்களும், அதுபோல் சென்னையில் இருந்து மேற்கண்ட நகரங்களுக்கு செல்ல வேண்டிய 13 விமானங்களும் என 26 பன்னாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source: https://www.dailythanthi.com/News/State/2020/03/17023345/26-flights-to-Chennai-canceled.vpf