இனி கிடைக்க மாட்டேன்.. கான்பரன்ஸ் காலில் சொல்லி விட்டு மாயமான பெண்.. அதிர்ச்சியில் சென்னை குடும்பம் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையை சேர்ந்த இளம் பெண்ணை காணவில்லை என அவரது குடும்பத்தார், பதைபதைப்புடன் தேடி வருகிறார்கள்.

வட பழனியைச் சேர்ந்தவர் அம்பிகா. இவருக்கு திருமணாகி 4 வயதில் குழந்தை இருக்கிறது. அந்த குழந்தையும் நோய்வாய்ப்பட்டு சிகிச்சையில் உள்ளது.

இந்த நிலையில்தான், அம்பிகாவுக்கும், அவர் கணவருக்கும் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. இதன்பிறகு கடந்த 12ம் தேதி முதல், திடீரென, அம்பிகா மாயமாகிவிட்டார்.

இதுகுறித்து சமூக வலைத்தளங்கள் வாயிலாக உதவி கேட்டிருந்தார் அம்பிகாவின், சகோதரர், சரவணன். இதையடுத்து ‘ஒன்இந்தியா தமிழ்’ வெப்சைட் சரவணனை தொடர்பு கொண்டு பேசியது. அவர் கூறியதாவது:

அம்பிகாவுக்கும் அவர் கணவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. கடந்த 16ம் தேதி மதியம் 12.30 மணிவாக்கில், எங்க அம்மா மற்றும், அம்பிகாவின் கணவர் இருவருக்கும், கான்பரன்ஸ் கால் செய்துள்ளார் என் சகோதரி. அப்போது, “இனிமே கிடைக்கமாட்டேன்.. தேடாதீர்கள்” அப்படீன்னு சொல்லிட்டு போனை கட் செய்துவிட்டார். பிறகு போன் ஆன் செய்யப்படவேயில்ல.

இதுவரை, அம்பிகா எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. ஆனால் நான் அவருக்கு இ-மெயில் அனுப்பினேன். அதை அவர் ரிசீவ் செய்துள்ளார். அது சென்னை வால்டாக்ஸ் சாலை பகுதியில் ஐபி அட்ரஸ் காட்டுகிறது. ஆனாலும் எங்களால கண்டுபிடிக்க முடியவில்லை. போலீசில் இதுபற்றி புகார் கொடுத்திருக்கிறேன். அவர்கள் 48 மணி நேரம் கால அவகாசம் கேட்டுள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

ஐபி அட்ரஸ், புகைப்படம் உள்ளிட்ட சகல வசதிகள் இருந்தும், காவல்துறை இன்னும் அந்த பெண்ணை கண்டுபிடிக்க முடியாத நிலை இருக்கிறது. இந்த விஷயத்தில் காவல்துறையின் வேகம் அவசியம். ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாக புகழப்படும், தமிழக காவல்துறை, விரைவில் அந்த பெண்ணை கண்டுபிடித்து, அவரது குடும்பத்தோடு சேர்த்து வைக்க வேண்டும். இதுதான் அந்த குடும்பத்திற்கு குறிப்பாக, 4 வயது குழந்தையின் முகத்தில் புன்னகையை மீட்டுத் தரும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

உங்களில் யாருக்காவது, இந்த பெண் பற்றி தெரியவந்தால், 6382367007 என்ற சரவணனின் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

Source: https://tamil.oneindia.com/news/chennai/young-woman-missing-in-chennai-380049.html