ராயபுரம் மண்டலத்தில் பாதுகாப்பு வளையத்தை பலப்படுத்தும் சென்னை மாநகராட்சி! | COVID19: Chennai Corporation to strengthen security at Royapuram – நியூஸ்7 தமிழ்

சென்னைச் செய்திகள்

கொரோனா பரவல் காரணமாக சென்னை ராயபுரத்தில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்படவுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கொரோனா பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் ஒன்றான ராயபுரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், காவல்துறை ஆணையர் ஏ.கே.விஷ்வநாதன் காவல்துறை துணை ஆணையர் தினகரன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். 

இதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னையில் இதுவரை 303பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 92 பேர் ராயபுரம் மண்டலத்தில் வசிப்பதாகவும் தெரிவித்தார். 

அதிலும் குறிப்பாக 4 மற்றும் 5 ஆவது வார்டுகளில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளதையடுத்து மூன்றடுக்கு பாதுகாப்பு போட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள மக்களுக்கு வீடுகளுக்கே சென்று அத்தியாவசிய பொருட்களை வழங்க திட்டமிடப்படுள்ளதாகவும் அப்பகுதியில் வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாக குறிப்பிட்டார். 

இதனை அடுத்து பேசிய சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஷ்வநாதன், மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த விவகாரம் மிகவும் கண்டிக்கத்தக்கது எனவும், இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Source: https://ns7.tv/ta/tamil-news/tamilnadu/21/4/2020/covid19-chennai-corporation-strengthen-security-royapuram