33 வார்டுகளைக் குறிவைக்கும் சென்னை மாநகராட்சியின் ‘நம்ம சென்னை கரோனா தடுப்புத் திட்டம்’ – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் கரோனா தொற்று அதிகமுள்ள 33 வார்டுகளைக் கணக்கெடுத்து அங்கு தன்னார்வலர்கள் மூலம் சோதனை, விழிப்புணர்வு, முகக்கவசம் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை ‘நம்ம சென்னை கரோனா தடுப்புத் திட்டம்’ என்கிற பெயரில் சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று எண்ணிக்கையில் மொத்தமுள்ள 36 மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கையை விட சென்னையின் 200 வார்டுகளில் கரோனா தொற்றால் பாதிகப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

நேற்றைய தமிழக மொத்த எண்ணிக்கையில் 688 என்கிற மொத்தத் தொற்று எண்ணிக்கையில் 80.2 சதவீதத் தொற்று சென்னையில் (552) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 12,448 -ல் சென்னையில் மட்டும் 7,672 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையின் மொத்த எண்ணிக்கை 7,672 என்கிற எண்ணிக்கையில் இருக்க மற்ற 36 மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை 4,776 ஆக உள்ளது. சென்னையின் மொத்த எண்ணிக்கை தமிழக எண்ணிக்கையில் 61.67 சதவீதம் ஆகும்.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 5 மண்டலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ராயபுரம் மண்டலத்தில் 1,423 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,137பேரும், மற்ற மண்டலங்களில் 900, 822, 723, 610 என்கிற எண்ணிக்கையில் நோய்ப் பாதிப்பு உள்ளது. இதில் 200 வார்டுகளில் 33 வார்டுகளில் அதிக அளவில் தொற்றுள்ளவர்கள் உள்ளனர்.

இதைக் கணக்கில் கொண்டு 33 வார்டுகளில் பிரத்யேக கவனம் செலுத்த சென்னை மாநகராட்சி முடிவெடுத்தது. அங்கு தன்னார்வலர்கள் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் மூலம் நேரடியாக தெர்மல் சோதனை, அதில் அறிகுறி உள்ளவர்களுக்கு உடனடியாக எக்ஸ்ரே, பிசிஆர் சோதனை உள்ளிட்டவற்றை நடத்த நடமாடும் ஆய்வகமும் அமைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர அங்குள்ள மக்களுக்கு ஜிங்க் மாத்திரைகள், வைட்டமின் மாத்திரைகள், முகக்கவசம், சானிடைசர் இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட வார்டுகள் உள்ள அதே பகுதியில் முகாம் அமைத்து சிகிச்சை, சோதனை செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

தற்பொழுது கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் சுகாதார ஆய்வாளர்களைக் கொண்டு கரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் நம்ம சென்னை கரோனா தடுப்புத் திட்டத்தை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் இன்று ராயபுரம் மண்டலம், வார்டு-56, பி.ஆர்.என். தோட்டப் பகுதியில் தொடங்கி வைத்தார்.

கரோனா வைரஸ் தொற்று தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கவும் நவீன ரோபோவின் செயல்பாட்டை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆணையர் பிரகாஷ், உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அன்பு வாசகர்களே….

வரும் மே 31 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.

CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு – இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!

– வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/555413-madras-corporation-of-chennai-corporation-targeting-33-wards.html