சென்னை புறநகரில் முழு ஊரடங்கை மீறிய 300 பேர் மீது வழக்கு – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை புறநகரில் முழு ஊரடங்கை மீறிய 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஆலந்தூர், 

தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு நேற்று அமல்படுத்தப்பட்டது. இதனால் சென்னை புறநகரில் இருந்து சென்னைக்குள் நுழையும் பகுதியான பரங்கிமலை ராணுவ பகுதி, கிண்டி ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி ஹால்டா ஆகிய பகுதிகளில் சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் குமார் தலைமையில் பரங்கிமலை உதவி கமிஷனர் அன்வர் பாஷா, கிண்டி உதவி கமிஷனர் ஹிட்லர் ஆகியோர் தலைமையில் போலீசார் தடுப்புகளை அமைத்து வாகன சோதனை செய்தனர்.

அப்போது மருத்துவம், விமான நிலையம், தண்ணீர், பால் ஆகியவற்றுக்கு உரிய அனுமதி பெற்ற வாகனங்களை மட்டும் செல்ல அனுமதித்தனர். முழு ஊரடங்கை மீறி தேவை இன்றி வாகனங்களில் சுற்றிய 50-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதேபோல் புளியந்தோப்பு, ஓட்டேரி, திரு.வி.க.நகர், செம்பியம், வியாசர்பாடி பகுதிகளில் முழுஊரடங்கை மீறி சுற்றித்திரிந்ததாக 145 இருசக்கர வாகனங்கள், 112 சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அதன் உரிமையாளர்கள் 250-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக போக்குவரத்து உதவி கமிஷனர் சுந்தரராஜன் தெரிவித்தார்.

Source: https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/27011737/Case-against-300-people-for-violating-full-curfew.vpf