சென்னை கலெக்டர் சீதாலட்சுமிக்கு கொரோனா: கிண்டி அரசு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை கலெக்டர் ஆர்.சீதாலட்சுமி கொரோ னாவால் பாதிக்கப்பட்டார். கிண்டியில் உள்ள கிங்ஸ் ஆராய்ச்சி மைய வளாகத்தில் உள்ள அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

சென்னை, 

தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகளும், தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார், தீயணைப்புத்துறையினர் என பலதரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் சென்னை மாவட்ட கலெக்டர் ஆர்.சீதாலட்சுமி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டங்கள், தொற்று பாதிப்பு இடங்களை நேரில் சென்று கண்காணித்தல் உள்பட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

இதற்கிடையே கடந்த சில தினங்களாக அவருக்கு லேசான காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதையடுத்து அவர், தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தினார். பரிசோதனை முடிவு வரும் வரை சென்னை கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.

இந்தநிலையில் பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து சீதாலட்சுமி, சென்னை கிண்டி கிங்ஸ் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் உள்ள அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கலெக்டருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து கலெக்டர் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. கலெக்டர் அலுவலக ஊழியர்களும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர்.

Source: https://www.dailythanthi.com/News/State/2020/07/29022255/Corona-to-Chennai-Collector-Seethalakshmi-Treatment.vpf