சென்னை, கோவையில்தான் அதிகம் பேருக்கு தொற்று தென்காசி, பெரம்பலூர், ராமநாதபுரத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்தது – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

தமிழகத்தில் சென்னை கோவையில் தான் அதிக பேருக்கு நேற்று தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் தென்காசி, பெரம்பலூர், ராமநாதபுரத்தில் நேற்று பாதிப்பு 10-க்கும் குறைவாக இருந்தது.

சென்னை, 

தமிழகத்தில் நேற்று புதிதாக 74 ஆயிரத்து 508 பேரின் மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 1,380 ஆண்கள், 877 பெண்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 257 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 12 வயதுக்கு உட்பட்ட 62 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 462 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக சென்னையில் 585 பேரும், கோவையில் 189 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். மேலும் தென்காசியில் 7 பேரும், பெரம்பலூரில் 6 பேரும், ராமநாதபுரத்தில் 4 பேரும் என 3 மாவட்டங்களில் மட்டுமே பாதித்தோரின் எண்ணிக்கை 10-க்கும் குறைவாக கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 3 லட்சத்து 60 ஆயிரத்து 803 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 7 லட்சத்து 46 ஆயிரத்து 79 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 4 லட்சத்து 50 ஆயிரத்து 473 ஆண்களும், 2 லட்சத்து 95 ஆயிரத்து 573 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 33 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 26 ஆயிரத்து 477 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 93 ஆயிரத்து 272 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

18 பேர் உயிரிழப்பு

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 12 பேரும், தனியார் மருத்துவமனையில் 6 பேரும் என 18 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 10 பேரும், காஞ்சீபுரம், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், சேலம், திருவள்ளூர், நெல்லை, திருப்பூர், விழுப்புரத்தில் தலா ஒருவரும் என 9 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 11 ஆயிரத்து 362 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

2 ஆயிரத்து 308 பேர்‘டிஸ்சார்ஜ்’

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 2 ஆயிரத்து 308 பேர் நேற்று பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 589 பேரும், சேலத்தில் 255 பேரும், கோவையில் 179 பேரும் அடங்குவர். இதுவரையில் 7 லட்சத்து 15 ஆயிரத்து 892 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 18 ஆயிரத்து 825 பேர் உள்ளனர். தமிழகத்தில் மேலும் ஒரு தனியார் நிறுவனத்துக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் 66 அரசு நிறுவனங்கள், 141 தனியார் நிறுவனங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source: https://www.dailythanthi.com/News/Districts/2020/11/10033033/Most-cases-in-Chennai-Coimbatore-Tenkasi-Perambalur.vpf