மழைக்கு சென்னை சாலைகளின் லட்சணத்தை பாருங்க மக்களே! – Samayam Tamil

சென்னைச் செய்திகள்
மழை இனிதுதான் என்றாலும், இந்த வார்த்தையை கேட்டதும் சென்னை மாநகரவாசிகள் அலறுவதற்கு காரணம் ஒன்று… 2015 இல் மாநகரம் சந்தித்த பெருவெள்ளமும், அதனால் ஏற்பட்ட கடும் பாதிப்புகளும். அடுத்து, தொடர்ந்தாற்போல சில நிமிடங்கள் மழை பெய்தாலே பொது போக்குவரத்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரும், அவற்றில் உள்ள குண்டும், குழியுமான பள்ளங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரும்தான். சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீரில் கண்ணுக்கு தெரியாமல் உள்ள மரண பள்ளங்களில் விழுந்து நாள்தோறும் பெரும் விபத்துகளை சந்தித்துவரும் பாதாசாரிகள், வாகன ஓட்டிகள் ஏராளம். ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்ற கணக்காய், தற்போது சில தினங்களாக பெய்துவரும் பருவமழையில் கந்தலாகி போயுள்ள சென்னை மாநகரின் முக்கியமான சாலை ஒன்றின் லட்சணம் குறித்து விவரிக்கிறது இந்தப் புகைப்பட கட்டுரை.

சிஎம்டிஏ வாகன நிறுத்த பல்நோக்கு வளாகம்



சென்னை மாதவரம், ரவுண்டானா மேம்பாலம் அருகே உள்ள சென்னை பெருநகர லாரி நிறுத்த வளாகத்தில் நூற்றுக்கணக்கான லாரி புக்கிங் அலுவலகங்கள் அமைந்துள்ளன. இத்துடன் மத்திய சேமிப்பு கழக கிடங்கு, மருந்து குடோன், மின் வாரிய அலுவலகம், வீடற்ற ஆண்கள் தங்கும் மாநகராட்சி விடுதி, ஏற்றுமதி, இறக்குமதி பொருள்கள் சேமிப்பு கிடங்கு என்று இந்த இடம் பல்நோக்கு வளாகமாக திகழ்கிறது.

பத்து சாலைகளும் பஞ்ச்சர்



பல்நோக்கு வளாகமாக திகழும் மாதவரம், சிஎம்டிஏ வாகன நிறுத்த வளாகத்தில் லாரி ஓட்டுநர்கள், க்ளினர்கள் மட்டுமின்றி சுமை தூக்கும் தொழிலாளர்கள் என்று மொத்தம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணி புரிந்து வருகின்றனர். இவர்களின் வசதிக்காக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பத்து சாலைகளும் தற்போதைய மழைக்கு மொத்தமாய் கந்தலாகியுள்ளன.

வரி செலுத்தியும் பயனில்லை



மாதவரம், வாகன நிறுத்த வளாகத்தில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து நாள்கணக்கில் தேங்கியுள்ளதால், இந்த பகுதியில் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. “சென்னை மாநகராட்சிக்கு வணிக ரீதியாக உரிய வரி செலுத்தி வருகிறோம். ஆனாலும் தங்களுக்கு முறையான சாலை, குடிநீர், மழைநீர் வடிகால், மின் வசதி, பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை” என்று சென்னை பெருநகர லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர்.

இப்படி செய்தால் என்ன?



ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படும் காலகட்டத்துக்குள் சாலை சேதமடைந்தால், அதனை மீண்டும் சீரமைப்பதற்கான செலவுத் தொகையை ஒப்பந்ததாரரிடமே கேட்டுப் பெறும் நடைமுறை மும்பை மாநகராட்சியில் வெகுகாலமாக இருந்து வருகிறது. இந்த நடைமுறை சென்னை மாநகராட்சியிலும் பின்பற்றப்பட்டால் மாநகர சாலைகள் மழை காலத்தில் கண்டமாகும் அவலநிலைக்கு ஒருவேளை விடிவு ஏற்படலாம்.

Source: https://tamil.samayam.com/latest-news/chennai-news/chennai-city-roads-damaged-in-every-rainy-season-public-suffers-as-usual/articleshow/79544695.cms