பிரதமர் மோடி நாளை சென்னை வருகை: போக்குவரத்தில் மாற்றம் – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகையை முன்னிட்டு சென்னையின் முக்கிய வழித்தடங்களில் நாளை காலை முதல் மதியம் வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படும் என்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

பல்வேறு அரசு நலத்திட்டப் பணிகளை தொடக்கிவைக்கும் விதமாக, பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வரவிருக்கிறார். தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடியின் சென்னை வருகை மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, சென்னையில் தீவிர காவல்துறை கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், போக்குவரத்தில் மாற்றம் செய்வது குறித்து போக்குவரத்துக் காவல்துறை தரப்பில் பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகையையொட்டி 14.02.2021 அன்று காலை 08.00 மணி முதல் மதியம் 01.00 மணிவரை கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றியமைக்கப்பட உள்ளது.

I. கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் சென்னை பெருநகர எல்லைக்குள் வர அனுமதி இல்லை.

II. மாநகர பேருந்துகள் மற்றும் பொதுமக்கள் வாகனங்கள் கீழ்கண்டபடி திருப்பி விடப்படும்.

a) கோயம்பேட்டில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் நாயர் பாலத்தின் வழியாக பாந்தியன் ரவுண்டானா, சித்ரா பாயிண்ட் வழியாக அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

b) இராயபுரத்தில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் இப்ராகிம் சாலை மின்ட் சந்திப்பு, பேசின் பாலம், எருக்கஞ்சேரி ரோடு, அம்பேத்கர் சாலை, புரசைவாக்கம் வழியாக தங்கள் இலக்கை சென்று அடையலாம்.

c) அண்ணாசாலையிலிருந்து இராயபுரம் நோக்கி வரும் வாகனங்கள் ஸ்பென்ஸர் பென்னி ரோடு, மார்ஸல் ரோடு, நாயர் பாலம், டவுட்டன் வழியாக தங்கள் இலக்கை சென்று அடையலாம்.

d) சவுத்கெனால் ரோட்டில் இருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் கச்சேரி சாலை, லஸ் சந்திப்பு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை சென்று அடையலாம்.

இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு ஏற்ப வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Source: https://www.dinamani.com/tamilnadu/2021/feb/13/prime-minister-modi-to-visit-chennai-tomorrow-change-in-traffic-3562548.html