சென்னையில் மூத்த குடிமக்களுக்கு இன்று முதல் இலவச பஸ் பாஸ் விநியோகம் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை மாநகரப் பேருந்துகளில் இன்று முதல் இலவசமாக பயணம் செய்வதற்காக பஸ் பாஸ் பெறுவதற்கான டோக்கன்கள் முதியவர்கள் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் மொத்த மக்கள் தொகையில் 12% முதியோர் உள்ளனர். மக்களின் சராசரி வாழ்நாள் அதிகரித்துள்ளது. தமி ழகத்தில் வாழ்நாள் வயது சராசரியாக 68 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் சர்க்கரை நோய், மூட்டு வலி போன்றவற்றுக்கு தொடர் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதற்காக அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோனர் ஏழை, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக தேர்தல் அறிக்கையில், மூத்த குடி மக்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங் கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதல்கட்டமாக சென்னை மாநகர பேருந்துகளில் மட்டும் மூத்த குடிமக்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இலவச பஸ் பாஸ் திட்டம் மூத்த குடிமக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக முதியோர்களுக்கான இலவச பஸ் பாஸ் சென்னையில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது சென்னை மாநகரப் பேருந்துகளில் இன்று முதல் இலவசமாக பயணம் செய்வதற்காக பஸ் பாஸ் பெறுவதற்கான டோக்கன்கள் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

21 பணிமனைகள், 19 பேருந்து நிலையங்களில் இலவச பேருந்து பயண அட்டைகளை முதியவர்கள் பெறலாம். 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மாதம் ஒன்றுக்கு பத்து வீதம், ஆறு மாதங்களுக்கு டோக்கன் வழங்கப்படும் எனவும் போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அடையாள அட்டை பெற்றுள்ளவர்கள் மற்றும் புதியதாக பெற விரும்புபவர்கள் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.mtcbus.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கொரோனா காரணமாக கடந்த 11 மாதங்களாக முடங்கிப் போயிருந்த மூத்த குடிமக்கள் அரசின் அறிவிப்பினால் நிம்மதியடைந்துள்ளனர்.

Source: https://tamil.oneindia.com/news/chennai/free-bus-pass-for-senior-citizens-in-chennai-412035.html