சென்னை மாநகராட்சி வாங்கும் கடன் மக்கள் மீதான சுமைதானே? – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

கரோனா வைரஸ் தாக்குதலின் முதலாம் அலை மற்றும் இரண்டாம் அலையின்போது சென்னை மாநகராட்சி ஆற்றிய பணி அளப்பரியது. இதற்கான பாராட்டுகளை அனைவரும் தெரிவித்துவரும் நிலையில், சென்னை மாநகராட்சி ரூ.2,500 கோடி கடனில் தத்தளிக்கிறது என்ற செய்தி வருத்தமளிக்கிறது. குறிப்பாக, மக்களின் வசதிக்காக, சாலை வசதி, பூங்கா உள்ளிட்ட கட்டமைப்புகளை உருவாக்க வெளியிலிருந்து வாங்கப்பட்ட கடன் தொகை மாநகராட்சிக்குப் பெரும் சுமையாக மாறிவிட்டதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியின்போது நடந்த சில ஊழல்களின் காரணமாகவே சென்னை மாநகராட்சியின் நிதிச் சுமை அதிகரித்துவிட்டது என்ற அரசியல்ரீதியான குற்றச்சாட்டும் கூறப்படுகிறது. எந்தப் புதிய ஆட்சி அமைந்தாலும் நடைபெறும் தவறுகளுக்கு முந்தைய ஆட்சியைக் குறைகூறுவதை மக்கள் நீண்ட காலமாகப் பார்த்துவருகின்றனர். அதே நேரத்தில், ஒரு ஆட்சியின் நிர்வாகத்தில் கடன் வாங்கி சுமையை ஏற்றிவிட்டுச் சென்றால், அந்தச் சுமையை அடுத்து வரும் ஆட்சி பொறுப்பேற்க வேண்டியுள்ளது. அடுத்த ஆட்சி அதன் மீது மேலும் சுமையை ஏற்றிவிட்டுச் செல்லும் நிலைதான் இருந்துவருகிறது.

சென்னை மாநகராட்சிக்கு ஓராண்டில் சொத்து வரி மூலமாக ரூ.720 கோடியும், தொழில் வரி மூலமாக ரூ.350 கோடியும் கிடைக்கிறது. மாநகராட்சியின் வருவாயில் பெரும் பகுதி இந்த இரு பிரிவுகளில் இருந்தே கிடைத்துவருகிறது. மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டிடங்களின் வாடகை, வாகன வாடகை, உரிமம் வழங்குவது தொடர்பான கட்டணங்கள் மூலம் ரூ.240 கோடி கிடைப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநகராட்சியின் வருவாய் இனங்களைப் பெருக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதே. சம்பளத்துக்கு ரூ.80 முதல் 100 கோடி வரையில் செலவிடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதம் ஒன்றுக்கு ரூ.10 கோடி வட்டியாக மட்டுமே மாநகராட்சி செலுத்துகிறது என்றும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மாநகராட்சியின் கடன் சுமையும் விரயமாகும் வட்டிப் பணமும் இறுதியில் மக்களின் மீதுதானே திரும்பும்? இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்தக் கடன் சுமையைத் தள்ளிவைத்துக்கொண்டே செல்ல முடியும்?

அத்தியாவசியக் கட்டமைப்புகளை உருவாக்குவதற்காகச் செலவிடப்படும் தொகை, அதற்காக வாங்கும் கடன் என்றைக்கும் விமர்சனத்தை உருவாக்காது. அதேநேரம், நன்றாகப் பயன்பாட்டில் இருக்கும் நடைபாதைகள், சாலைகளை இடித்துவிட்டு மீண்டும் அமைத்தல், புதிதாகப் போடப்பட்ட சாலைகளை, நடைபாதைகளை மற்ற அமைப்புகள் தோண்டிப்போடுவதைக் கண்டு பாராமுகமாக இருத்தல் போன்றவை மக்களிடமிருந்து பெறப்பட்ட வரிப் பணத்தை வீணடிக்கும் செயல்களாகவே பார்க்கப்படுகின்றன. இது போன்ற தவிர்க்கக்கூடிய செலவுகளைக் குறைப்பதும், சிறந்த நிர்வாகத் திறமை உள்ளவர்களை முக்கியப் பொறுப்புகளில் நியமித்து, நிதி நிர்வாகத்தைச் செம்மையாக மேற்கொள்வதுமே ஓர் அரசின் கடமையும் பொறுப்பும் ஆகும்.

Source: https://www.hindutamil.in/news/opinion/editorial/694819-chennai-corporation.html