கேரளத்தில் இருந்து சென்னை வந்த ரயில் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை – தினமணி

சென்னைச் செய்திகள்

கோப்புப்படம்

கேரளத்தில் இருந்து ரயில்களில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த பயணிகளுக்கு மாநகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.

கேரளத்தில் இருந்து தமிழகத்துக்கு ரயில்களில் வரும் பயணிகள் இரண்டு முறை தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் அல்லது கரோனா தொற்றின்மை சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் இந்த நடைமுறை வியாழக்கிழமை முதல் அமல்படுத்தப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தாா்.

அதன்படி, கேரளத்தில் இருந்து ரயில்களில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த பயணிகளை தமிழக ரயில்வே போலீஸாா் உதவியுடன் சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை ஊழியா்கள் வியாழக்கிழமை சோதித்தனா். இதில், கரோனா தொற்றின்மை சான்றிதழ் அல்லது இரண்டு முறை தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் இல்லாத 33 பயணிகளை பிடித்து, கரோனா நோய்த்தொற்று இருக்கிா என்பதை கண்டறிய சளி மாதிரிகளை எடுத்தனா். மற்ற பயணிகளுக்கு உடல்வெப்பநிலை அளவைப் பரிசோதித்தனா்.

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்திலும் கேரளத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை விரைவில் நடைபெறவுள்ளதாக மாநகராட்சி அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

Source: https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2021/aug/06/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-3674783.html