சென்னை மக்களுக்கு குட் நியூஸ்: 49 இடங்களில் இலவச வைஃபை வசதி அறிமுகம் – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

சீர்மிகு நகரங்கள் திட்டத்தின் கீழ், சென்னையில் 49 இடங்களில் பொது மக்களுக்கு இலவச வை-ஃபை வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் 30 நிமிடங்கள் வரை இலவசமாக வை-ஃபை கிடைக்க உதவும் இந்த வசதி.

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் ஒரு குழு இயங்கி வருகிறது. சீர்மிகு நகர திட்டத்தின் கீழ், மாநகரின் பல்வேறு திட்டப்பணிகளை ஒருங்கிணைப்பது, நிர்வாக செயல்திறனை மேம்படுத்துவதே ஆகியவையே இந்தக் குழுவின் பணி. மாநகரின் முக்கிய இடங்களை கண்காணிப்பது, பேரிடர் மேலாண்மை குறித்த கருவிகளை பொருத்துவது, வெள்ளப்பெருக்கு ஏற்படும் இடங்களில் நீர் அளவை கண்காணிப்பது ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகிறது.

சீர்மிகு நகர திட்டத்தின்கீழ், சென்னை மாநகராட்சியின் 49 இடங்களில் ஸ்மார்ட் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட் கம்பங்கள், அண்ணாநகர் டவர் பூங்கா, முகப்பேர் கிழக்கு, மூலக்கடை, தண்டையார்பேட்டை, சென்ட்ரல் ரயில்நிலையம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கம்பங்களுக்கு அருகில் சென்று, OTP எண்ணை பெற்று, 30 நிமிடங்கள் வரை பொதுமக்கள் இலவசமாக, செல்போன்கள், கணினி மூலம் இணையத்தை பயன்படுத்த முடியும்.

இந்தத் திட்டம் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கம்பங்கள் எங்கெல்லாம் உள்ளன என்பதை பொதுமக்கள் மாநகராட்சி இணையதளமான chennaicorporation.gov.in வாயிலாக தெரிந்து கொள்ள முடியும். இந்த திட்டம் அமலானதும் இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் இணையத்தை இலவசமாக பயன்படுத்தினர்.

இலவச வை-ஃபை வசதி, ஆன்லைன் வகுப்புகளுக்கு உதவியாக இருக்கும் என்று மாணவர்கள் தெரிவிக்கும் நிலையில், இணையம் அனைவருக்கும் கிடைக்கும் பொருளாகிவிட்டதால், இந்த திட்டம் பயன்தராது என்று தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சென்னையை நவீனப்படுத்தும் அரசின் முயற்சி பாராட்டை பெற்று வரும் நிலையில், இந்த வகை முயற்சிகள் பலன்தருமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Source: https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-district-free-wifi-setup-in-49-places-around-chennai-skd-538067.html