கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்தவில்லை என ஆணையர்கள் உறுதிமொழி தர வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவதில்லை என்ற உறுதிமொழியை அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனித கழிவுகள், சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணிகளை வெளிநாடுகளில் தானியங்கி இயந்திரங்கள் செய்து வருகின்றன. இந்தியாவில் பல்லாண்டு காலமாக நிலவி வரும் மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் குரல்கள் வைக்கப்பட்டு வருகின்றது. பல பல தரப்பில் இருந்து கோரிக்கை வைத்தும் இந்தியாவில் இதை மனிதர்களே செய்யும் நிலை நீடித்து வருகிறது.

ஆனால் இன்னும் முழுமையாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. சில இடங்களில் இப்படி சாக்கடைகளை சுத்தம் செய்யும் போது, உள்ளேயே சிக்கி பலர் பலியாவதும், விஷ வாயு தாக்கி பலர் பலியாகும் கொடுமைகளும் கூட நடக்கின்றன.

அதிலும் பட்டியலின சமூக மக்கள் காலங்காலமாக இந்த பணிகளை செய்யும் நிலைக்கு தள்ளப்படும் கொடுமையும் பல்லாண்டு காலமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் பாதாளச் சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகள் சுத்தம் செய்வதில் மனிதர்களை பயன்படுத்துதல் கூடாது, விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் நிவாரணம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு ஏற்கனவே தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, இத்தகைய உயிரிழப்புகள் குறித்து தமிழக அரசு அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தாலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மனித கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவது மனித தன்மையற்ற செயல்.

மனித குலத்துக்கு தீங்கு விளைவிக்கும்.. பிளாஸ்டிக் பைகளுக்கு அதிரடி தடை.. தமிழக அரசு புது உத்தரவு!மனித குலத்துக்கு தீங்கு விளைவிக்கும்.. பிளாஸ்டிக் பைகளுக்கு அதிரடி தடை.. தமிழக அரசு புது உத்தரவு!

கழிவுகளை மனிதர்களே அகற்றும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ,அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முத்துக்குமார், தற்போது யாரும் பயன்படுத்தப்படுவதில்லை என்றும் இயந்திரங்கள் தான் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவதில்லை என்ற உறுதிமொழியை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 6 வாரத்துக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

மனித கழிவுகளை மனிதர்களே அள்ளுதல், விஷவாயு தாக்கி மரணமடைதல் தொடர் நிகழ்வாக உள்ளது. இதற்கு எதிராக தேசிய துப்புரவாளர் ஆணையம் அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்கனவே சுற்றறிக்கையே அனுப்பியுள்ளது. மனித கழிவுகளை மனிதர்கள் அள்ள அனுமதிக்கக்கூடாது, உயிரிழந்தால் உடனடியாக ரூ.10 லட்சம் நிதி அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தது. இதை பின்பற்றி சென்னையில் சில இடங்களில் கழிவுகளை அகற்றும் நவீன இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, செயல்பாட்டிற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Municipal and corporation commissioners should give pledge against manual scavenging order Madras Hight Court.

Source: https://tamil.oneindia.com/news/chennai/municipal-and-corporation-commissioners-should-give-pledge-against-manual-scavenging-order-mhc-432318.html