பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு – சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தல் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

தீபாவளி அன்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் இன்று செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 1 முதல் 4 ஆம் தேதி வரை 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். 

அதே போல, மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான கோயம்பேடு, தியாகராய நகர், வளசராவாக்கம், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகள் அடையாளம் காணப்பட்டு அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் முக்கியமாக பட்டாசு வெடிப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி 2 மணி நேரம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் என பிரித்து வழங்கப்பட்டிருந்தது.

அதன்படி தீபாவளி அன்று காலை 6 முதல் 7 மணி வரையிலும், மாலை 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என அவர் அறிவுறுத்தியுள்ளார். அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்தாலோ, அதிக சத்தம் கொண்ட பட்டாசுகளை வெடித்தாலோ அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார். 

மேலும் பேருந்து, ரெயில்களில் பட்டாசுகளை எடுத்துச் செல்பவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என்று குறிப்பிட்ட அவர், கடந்த ஆண்டும் 382 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். தீபாவளி பண்டிகையன்று மக்கள் அதிகம் கூடும் பகுதியில் செல்லும் பெண்கள், தாங்கள் அணிந்திருக்கும் நகைகளை பாதுகாப்பான முறையில் அணிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். 

Source: https://www.dailythanthi.com/News/State/2021/10/29161348/Time-limit-for-fireworks-Chennai-Police-Commissioner.vpf