நேரம் தவறாமல் விமானங்கள் இயக்கம் – சென்னை விமான நிலையத்திற்கு 8-வது இடம் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சா்வதேச அளவில் குறித்த நேரத்தில் விமானங்களை இயக்கிய விமான நிலையங்களில் பட்டியலில் சென்னை விமான நிலையம் 8-வது இடத்தில் உள்ளது.

சென்னை,

கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச விமான பயணத்திற்கு பல்வேறு நாடுகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதனால் விமான நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. கொரோனா பரவல் குறைய தொடங்கிய நிலையில், சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு, படிப்படியாக விமான போக்குவரத்தில் இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. 

தற்போது மீண்டும் பல நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதே வேளையில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பும் உயர்ந்து வருகிறது. இதனால் விமான நிலையங்களில் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் மற்றும் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்த நிலையில் சர்வதேச அளவில் விமான போக்குவரத்தில் சிறப்பாக செயல்பட்ட விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்கள் குறித்த கணக்கெடுப்பு தொடர்பான அறிக்கையை ‘சிரியம்’ என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவில் இருந்து சென்னை விமான நிலையம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. 

இதன்படி உலக அளவில் நேரம் தவறாமல் விமானங்களை இயக்கிய விமான நிலையங்களின் பட்டியலில் சென்னை சர்வதேச விமான நிலையம் 8-வது இடத்தில் உள்ளது. சென்னை விமான நிலையத்தில் 98.32 சதவீதம் சரியான நேரத்திற்கு விமானங்கள் இயக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 96.51 சதவீதத்துடன் ஜப்பானின் இட்டாமி விமான நிலையம் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Source: https://www.dailythanthi.com/News/TopNews/2022/01/02201120/Most-punctual-airports-8th-place-for-Chennai.vpf