சென்னை 1,243 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை… கூடுதல் பாதுகாப்பு – ககன்தீப் சிங் பேடி – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் 1243 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், தேர்தல் நாளன்று 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும் மாவட்ட தேர்தல் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கு வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

பட்ஜெட் தயாரிப்பு.. 5 பேர் குழுவில் இடம்பெற்ற தமிழக அதிகாரி.. யார் இந்த ஐவர்? முக்கிய பங்கு என்ன?பட்ஜெட் தயாரிப்பு.. 5 பேர் குழுவில் இடம்பெற்ற தமிழக அதிகாரி.. யார் இந்த ஐவர்? முக்கிய பங்கு என்ன?

வேட்புமனு தாக்கல் கடந்த 28ஆம் தேதி தொடங்கியுள்ளது. இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப் பெற பிப்ரவரி 7ஆம் தேதி கடைசி நாளாகும்.
அன்றைய தினம் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படும்.

ஆலோசனைக்கூட்டம்

இந்நிலையில், சென்னையில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பை அதிகப்படுத்துவது குறித்தும் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்தும் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் ககன்தீப் சிங் பேடி மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார்.

ககன்தீப் சிங் பேடி

ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ககன்தீப் சிங் பேடி, சென்னையில் வரும் தேர்தலுக்கு 5794 வாக்குச்சாவடி மையங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இதில் 1,061 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனவும், 182 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என மொத்தம் 1,243 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கையாக காணொலி காட்சி வாயிலாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பயிற்சி வகுப்புகள்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கான தேர்தலில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்தல் பணியாளர்களை பயன்படுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பில் சிலர் பங்கேற்கவில்லை. அவர்களுக்கு வரும் 5ஆம் தேதி சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. தொடர்ந்து வரும் 10ஆம்தேதி 2ஆம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.

கடைசி நாள்

சென்னையில் கடந்த புதன்கிழமை வரை 32 வார்டுகளில் ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் அதிக வேட்புமனுக்களை எதிர்ப்பார்த்திருக்கிறோம். வரும் பிப்ரவரி 7ஆம் தேதி மதியம் 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் இருக்கிறது.

பொதுக்கூட்டத்துக்கு அனுமதி இல்லை

தேர்தல் நடத்தை விதிகளை பொறுத்தவரை வேட்பாளர்கள் ஓட்டு சேகரிக்க வீடுவீடாக செல்லும்போது கூட்டமாக செல்லக்கூடாது. வரும் 11ஆம் தேதி வரை சாலை பேரணி, பொதுக்கூட்டம் உள்ளிட்டவை நடத்துவதற்கு தமிழக தேர்தல் கமிஷனர் அனுமதி அளிக்கவில்லை. எனவே சென்னையில் சாலை பேரணி, பொதுக்கூட்டம் நடத்தவும் அனுமதி இல்லை.

வாக்கு எண்ணிக்கை

சென்னையில் உள்ளரங்குகளில் மட்டுமே பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்படும். அதுவும் 100 பேருக்கு மிகாமலும் அல்லது உள்ளரங்கின் பங்கேற்கும் எண்ணிக்கையில் 50 சதவீதம் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி மண்டலத்துக்கு ஒன்று வீதம் 15 மையங்களில் நடைபெற உள்ளது.

பறக்கும் படை குழுக்கள்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், “பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே வாக்குச்சாவடிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும். சென்னையில் 1,243 வாக்குச் சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது” எனக் கூறினார். எம்எல்ஏ கே.பி.பி. சங்கர், சாலை போடும் பணியில் ஈடுபடும் போது மாநகராட்சி உதவி பொறியாளரை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட விவகாரத்தில் எழுத்துப்பூர்வமான வாக்குமூலம் கொடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

English summary
District Election Officer Gagandeep singh bedi, said that 1243 tense polling booths have been identified in Chennai and 18,000 policemen will be on security duty on election day.

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-1-243-polling-stations-are-tense-extra-security-gagandeep-singh-bedi-447596.html