திமுக வசமான சென்னை மாநகராட்சி… சொல்லி அடித்த முதல்வர் – முதல் பெண் மேயர் யார் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: தமிழக தலைநகரமான சென்னை மாநகராட்சியை திமுக தன்வசப்படுத்தியுள்ளது. அபார வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் முதல் பெண் மேயர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சென்னை திமுகவின் கோட்டை என்று மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இவற்றில் மொத்தம் 12,820 வார்டுகள் உள்ளன. ஏற்கெனவே 218 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதம் உள்ள வார்டு உறுப்பினர் பதவிகளை பிடிக்க 57,746 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியுள்ளது. கொரனா பரவல் காலம் என்பதால் அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

கோவை மாநகராட்சி தேர்தல்.. வாக்கு எண்ணிக்கைக்கு தடையில்லை.. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவுகோவை மாநகராட்சி தேர்தல்.. வாக்கு எண்ணிக்கைக்கு தடையில்லை.. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

சென்னை மாநகராட்சி

334 ஆண்டுகள் பாரம்பரியம் உடைய சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கான கவுன்சிலர் பதவி தேர்தல் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. மண்டலத்திற்கு ஒரு வாக்கு எண்ணிக்கை மையம் என மொத்தமாக 15 இடங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆரம்பம் முதலே திமுக வேட்பாளர்கள் முன்னிலை பெற்று வந்தனர்.

திமுக வசமான சென்னை மாநகராட்சி

இதுவரை நடந்து முடிந்துள்ள வாக்கு எண்ணிக்கை முடிவில் 116 இடங்களில் திமுக வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. அதிமுக 13 இடங்களிலும், பிற கட்சிகள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதன் மூலம் சென்னை மாநகராட்சி மீண்டும் திமுக வசம் ஆகிறது. சென்னை திமுகவின் கோட்டை என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின்.

மு.க ஸ்டாலின்

1996ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியின் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்மேயராக பதவி வகித்தவர் தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின். கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக முதல் முறையாக சென்னை மாநகராட்சியை கைப்பற்றியது.

முதல் பெண் மேயர்

தற்போது சென்னை மாநகராட்சி திமுக வசம் வந்துள்ள நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி உறுப்பினர்கள் மார்ச் 4ஆம் தேதி மாநகராட்சியின் மேயரை மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க உள்ளனர். முதல் பெண் மேயர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

English summary
In Chennai, the capital of Tamil Nadu, a total of 15 polling stations will be set up at the polling booths. There are 14 tables set up in the counting center. Two or three rounds of voting per ward are likely to take place.

Source: https://tamil.oneindia.com/news/chennai/200-wards-in-chennai-voter-turnout-in-15-centers-who-will-win-449592.html